திருப்பூர், பிப்.1 –
அவிநாசி ஒன்றியத்தில் காவல் துறையினரின் ஆதாய அத்துமீறல் நடவடிக்கையை நிறுத்துமாறு அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்தி உள்ளது.

அவிநாசி ஒன்றியத்தின் அனைத்து கட்சிகள் கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.முத்துச்சாமி தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இதில் அவிநாசி ஒன்றியம் முழுவதும் சட்டவிரோதமாக நடைபெறும் சேவல் சண்டை, லாட்டரி சீட்டு விற்பனை, அனுமதி இல்லாத பார், சூதாட்டம் உள்ளிட்டவைகளை காவல்துறை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும். அவிநாசியின் பிரதான சாலைகளில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை என்ற பெயரில் கட்டாயமாக வசூல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இதேபோல், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை அலைக்கழிப்பதையும், லாரி, கார் போன்ற வாகனங்களை சோதனை செய்யாமல் விதிவிலக்கு தருவதையும் நிறுத்த வேண்டும். மேலும், புகார் கொடுக்கும் சிவில் வழக்குகளை ஆதாயத்திற்காக காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதை நிறுத்த வேண்டும். கட்சிகளின் ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி தர வேண்டி மனு அளிக்கும்போது அலைக்கழிப்பதையும், இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கும், கொடி, தோரணம், விளம்பரம் பலகைகள் வைப்பதற்கும் உள்ள விதிமுறைகளை அனைத்து கட்சிகளுக்கும் பாரபட்சமின்றி கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, இக்கூட்டத்தில் திமுக சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, பொன்னுசாமி, ஈஸ்வரன், சந்தோஷ், சிபிஐ சார்பில் ஒன்றிய செயலாளர் இசாக், வி.கே.சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஆர்.பழனிச்சாமி, ஆர்.வேலுச்சாமி, காங்கிரஸ் சார்பில் மணி, வி.கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன், மதிமுக சார்பில் கோவிந்தராஜ், என்.ரவி, கொமதேக சார்பில் ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.