திருப்பூர், ஜன. 31 –
மத்திய பட்ஜெட் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் விவசாயிகள் எதிர்பார்ப்புக் குறித்த பட்டியலை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியபோது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அப்போது விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று குறிப்பிட்டதைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. விவசாயக் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தினால் மட்டுமே வருவாயை இரட்டிப்பாக்க முடியும். இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும். நாட்டின் மக்கள் தொகையில் 58 சதவிகிதத்தினர் விவசாயத் தொழில் ஈடுபட்டிருப்பதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் பட்ஜெட் ஒதிக்கீடு 2.5 ஆக இருக்கிறது. இது ஒரு விவசாய விரோதப்போக்கு. மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு இருக்க வேண்டும். சில நேரங்களில் விளைந்த உணவுப்பொருளுக்கு விலை இல்லாத காரணத்தால். வீதியில் கொட்ட வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகிறது. பல நேரங்களில் உணவுக்காக வெளிநாடுகளில் கையேந்த வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது. அரசின் திட்டமிடல் கோளாறே இதற்கு காரணம். இந்தியாவின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்காக வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும், கூடுதலாக மாசுபடுத்தும் தொழில்களுக்கு நாட்டில் சிவப்புக் கம்பளம் விரிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உணவுமுறை மாற்றம், பயிர்முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், பருவநிலை மாற்றம், மக்கள்தொகைப் பெருக்கம் இவற்றிற்கு தீர்வுகாணும் விதமாக, திட்ட அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.