திருப்பூர், ஜன. 31 –
ஊத்துக்குளி ஒன்றியத்தில் முட்புதர் மண்டி இருக்கும் சாலையை செப்பனிட்டுத் தருமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மொரட்டுப்பாளையம் ஊராட்சி செம்பாவள்ளம் முதல் அணைப்பாளையம் அணைக்கட்டு நொய்யல் வரையிலான ஊராட்சி ஒன்றிய தார்ச்சாலை மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை நொய்யல் பாலம் தாண்டியும் முதலிபாளையம் சாலை வரை இணைப்பாகவும், ஊத்துக்குளி – காங்கயம் சாலையில் சர்வோதய சங்கம் அருகில் இருந்து வேலம்பாளையம் வழியாக சிட்கோ முதலிபாளையம் மற்றும் பொங்கலூர் வரை செல்கிறது. இது விவசாயிகளும், பொதுமக்களும் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து மிக்க பிரதான சாலையாகும்.

இதில் செம்பாவள்ளம் முதல் அணைப்பாளையம் அணைக்கட்டு நொய்யல் பாலம் மற்றும் திருப்பூர் ஒன்றியப் பகுதிகளில் இருபுறமும் முட்புதர்கள் சூழ்ந்து மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இங்கு முட்புதர்களை அகற்றி, பழுதான தார்ச்சாலைகளை நெடுஞ்சாலை துறை மூலம் உடனே சீரமைத்துத் தர வேண்டும்.அதேபோல் மொரட்டுப்பாளையம் வாரச் சந்தையின் சுற்றுச்சுவர் இல்லாததால் சுகாதார சீர்கேட்டால் மோசமான நிலையில் ஆங்காங்கே ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிறது. எனவே இந்த சந்தையை சுகாதாரமாக பராமரிக்கவும், பாதுகாக்கவும், நிலத்தை அளவீடு செய்து சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட நகர வாரச்சந்தையை சுகாதாரமாக பராமரிக்கவும், போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்படும் கடைகளை முறைப்படுத்தவும் நடவடிகை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.