ஈரோடு, ஜன. 31-
உரிய அளவீடு செய்து, உறுதி செய்ய பிறகே நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஈரோடு மாநகராட்சி, வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராஜன் தலைமையில் நீர் நிலைப் புறம்போக்குகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் புதனன்று ஈரோடு மாநகராட்சி, வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் தற்போது நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் ஓடையோரங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு வட்டாட்சியர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர். சொந்த நிலம் வாங்கி, வீடு கட்ட வழியில்லாத அடித்தட்டு மக்கள் கூலி வேலை பார்த்து கிடைத்த சொற்ப வருமானத்தில் ஓடையோரங்களில் வீடுகள் கட்டி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகவசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை காரணம்காட்டி வீடுகளை அகற்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்லாயிரம் மக்கள் தங்களது வசிப்பிடத்தை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டது. இதன்பின்னர், ஜனவரி. 23, 24 ஆகிய தேதிகளில் வீடுகளை இடிக்கப்போவதாக தகவல்கள் வெளியானதும், மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்தோம். அப்போது, நீர் நிலைப் புறம்போக்கு இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்கக்கூடாது. நீர்நிலைப் புறம்போக்கு என்பதை உரிய அளவீடு செய்து உறுதிசெய்த பிறகே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாற்று இடம் அளித்து வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். அதுவரை நோட்டீஸ் அளித்துள்ள மக்களை அப்புறப்படுத்துவதைக் நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தினோம்.

இதுதொடர்பாக கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்படும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், நீர்நிலைகளில் உள்ள குடியிருப்புகள் குறித்து குழுக்கள் அமைத்து முறையாகக் கணக்கெடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். ஆனால், தற்போது ஆட்சியரின் உறுதிமொழிக்கு மாறாக, மக்களுக்குத் தொடர்ந்து நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, மேற்குற்ப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, பழைய ஆர்.எஸ்.ஆர் வரைபடங்களை ஆய்வு செய்தும், நேரில் ஆய்வு செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, எஸ்.சுப்பிரமணியன், பி.பழனிசாமி, கோமதி, ஆர்.விஜயராகவன், நகரச்செயலாளர் சுந்தரராஜன், ஈரோடு தாலுகா செயலாளர் ராஜா, மாதர் சங்க மாவட்ட தலைவர் லலிதா மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

Leave a Reply

You must be logged in to post a comment.