திருப்பூர், ஜன.31 –
திருமூர்த்தி அணையிலிருந்து புதனன்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணையிலிருந்து விவசாயப் பாசனத்திற்காக புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பாலாறு படுகை பாசனத்தில் முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் உடுமலை வட்டத்தில் 27 ஆயிரத்து 446 ஏக்கர், மடத்துக்குளம் வட்டத்தில் 7 ஆயிரத்து 492 ஏக்கர், தாராபுரம் வட்டத்தில் 8 ஆயிரத்து 395 ஏக்கர், பல்லடம் வட்டத்தில் 7 ஆயிரத்து 887 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும்.

இதேபோல், திருப்பூர் வட்டத்தில் 11 ஆயிரத்து 309 ஏக்கர், காங்கயம் வட்டத்தில் 15 ஆயிரத்து 392 ஏக்கர் என மொத்தம் 77 ஆயிரத்து 921 ஏக்கர் நிலமும், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தில் 12 ஆயிரத்து 567 ஏக்கர், சூலூர் வட்டத்தில் 4 ஆயிரத்து 33 ஏக்கர் என மொத்தம் 16 ஆயிரத்து 600 ஏக்கர் ஆக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சார்ந்த 94 ஆயிரத்து 521 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும். புதன்கிழமை முதல் இரண்டு சுற்றுகளாக மொத்தம் 3,800 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 912 கன அடி அளவிற்கு அதிகரித்து வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்டார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், விவசாய சங்கத்தினர் உடனிருந்தனர். இது குறித்து விவசாயிகள் தரப்பில் கேட்டபோது, விவசாயிகள் தொடர் கோரிக்கை வைத்து வற்புறுத்திய பிறகுதான் தற்போது அரசுத்தரப்பில் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர். இப்போது அணையில் இருக்கும் தண்ணீரை விவசாயிகள் அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் சரியாக நீர் நிர்வாகம் செய்து பாரபட்சத்தைத் தவிர்த்து, சிக்கனமான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.