திருப்பூர்,:
திருப்பூர் மாநகரில் வெளிநாட்டினரை தங்க வைத்துள்ளோர் அதற்குரிய ஆவணங்களின் நகல்களை காவல் துறையில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல் ஆணையாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டினர் விடுதிகளில் அறை எடுத்தால் அவர்கள் குறித்த விவரங்களை சி-பார்ம் எனப்படும் படிவத்தில் பூர்த்தி செய்து 24 மணி நேரத்துக்குள் அருகே உள்ள காவல் நிலையத்தில் அளிக்க வேண்டும். வீடுகளை வாடகைக்கு விடும்போது அவர்கள் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களின் நகல் பெற்று, காவல் துறையில் அவை உண்மையானதா என உறுதிப்படுத்த வேண்டும். வணிகர்கள், வெளிநாட்டினருடன் வர்த்தகம் செய்யும்போது, அவர்களிடம் உரிய வர்த்தக விசா இருந்தால் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும். சுற்றுலா, கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை விசா இருப்பின், அவர்களுடன் வர்த்தகம் செய்யக்கூடாது. ஏற்கனவே, வெளிநாட்டினரை தங்க வைத்துள்ள வீட்டு உரிமையாளர்கள், தங்கியுள்ளோரின் ஆவணங்களின் நகல் பெற்று காவல் துறையில் ஒப்படைத்து சரி பார்க்க வேண்டும். மேற்படி, விதிமுறைகளை கடைப்பிடிக்காத வீட்டின் உரிமையாளர்கள், அவர்கள் தங்க வைத்துள்ள நபர்களின் ஆவணங்கள் போலி என தெரியவரும் நிலையில், சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: