தீக்கதிர்

தமிழின் முதல் ஒலி இதழ் ‘மார்க்சிஸ்ட்’…!

தமிழில் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் தனது பயணத்தைத் தொடங்குகிறது. ஆங்கிலத்தில், ஒலி வடிவில் கருத்துக்களை தொகுத்து, விநியோகிக்கும் முறையை ‘பாட்காஸ்ட்’ என்கிறார்கள்.

செய்திப் பத்திரிக்கைகள், குறிப்பாக ஆங்கிலத்தில் இவ்வசதியை 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வழங்கத் தொடங்கின. “சான்பிரான்சிஸ்கோ க்ரானிக்கில்” என்ற பத்திரிக்கையை தனது இணையத்தில் இவ்வசதியை முதலில் அறிமுகம் செய்தது. ஆசியாவில் முதல் முறையாக “சவுத் சைனா மார்னிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கை இவ்வசதியைக் கைக்கொண்டது. தமிழில் மார்க்சிஸ்ட் இதழில் இவ்வசதியை பயன்படுத்தியுள்ளோம். இனி ஒலி இதழாகவும் மார்க்சிஸ்ட் தனது வாசகர்களை வந்தடையும்.

தமிழில் டி.டி.எஸ் அறிமுகம்:
மார்க்சிஸ்ட் கட்டுரைகளை ஒலி வடிவில் கொடுக்க இரண்டு வழிமுறைகள் பயன்படுத்தப்படவுள்ளன. அதில் முதலாவது, ‘எழுத்திலிருந்து பேச்சு’(டி.டி.எஸ்) என்ற தொழில்நுட்பமாகும். ஆங்கில மொழியில்தான் எழுத்துக்களை ஒலிக்குறிப்புகளாக்கி, மென்பொருள் ஆய்வுக்கு உட்படுத்தி எழுதுவதை கணினியே வாசிக்கச் செய்யும் வசதி இதுவரை இருந்துவந்தது. தமிழில் இந்த தொழில்நுட்பம் குழந்தைப் பருவத்தில் இருக்கிறது. பயன்பாடுதான் ஒரு நுட்பத்தை மேம்படுத்த அடிப்படை. அவ்வகையில் ‘மார்க்சிஸ்ட்’ இந்த நுட்பத்தை மேம்படுத்துவதற்கான தனது பங்களிப்பாகவும் இப்பணியை மேற்கொள்ளவுள்ளது. தமிழில் இதற்கான ஆய்வை ஐ.ஐ.டி சென்னை கல்வி நிறுவனம் மேற்கொண்டிருந்தது, அதனைப் பெற்று தொழில்நுட்ப வல்லுனர்கள் சீனிவாசன், பத்மகுமார், மோகனம், ராமன், நாகராஜன், ஹேமா ஆகியோரின் முயற்சியில் மார்க்சிஸ்ட் கட்டுரைகள் தற்போது ஒலி வடிவம் பெறுகின்றன.

இரண்டாவதாக நாம் பயன்படுத்தவுள்ளது மனிதக் குரலைக் கொண்டே கட்டுரைகளை வாசித்து அவற்றை ஒலிக் கோப்புகளாக வழங்குவது. இந்த முறையில் கொடுக்கப்படும் கோப்புகளும், கணினி மூலம் மாற்றப்படும் கோப்புகளும் இணைய வெளியில் இலவசமாகக் கிடைக்கும் வகையில் வழங்கப்படவுள்ளன.

ஒலி இதழ் பயன்பாடு
மார்க்சிஸ்ட் கட்டுரைகள் ஒலி வடிவில் கிடைக்கும்போது அது பல்வேறு தரப்பினருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படும். தன்னார்வலர்கள் கூடுதலாக இணையும்போது இவ்வசதியை புத்தக வாசிப்பு, செய்தியறிக்கை வாசிப்பு என பலவித பயன்பாடுகளுக்கான வாய்ப்புகளும் உள்ளன. அதற்கேற்ப மென்பொருளையும், ஒலிக்குறிப்பையும் மேம்படுத்துவது தொடர் உழைப்பு தேவைப்படும் வேலை ஆகும். தன்னார்வலராக இம்முயற்சியில் இணைத்துக்கொள்ள முன்வரும் தோழர்கள் அதனை சாதித்துக் காட்டுவார்கள்.

இணையத்தில் ஒலிக்குறிப்புகள் ஆடியோ கோப்புகளாக சேமிக்கப்படும்; அதனை அலைபேசியில் கேட்க மார்க்சிஸ்ட் செயலிக்கு உள்ளாகவே வசதி வழங்கப்படுகிறது. அதனைப் பெற ஆண்டிராய்ட் அலைபேசியின் ப்ளே ஸ்டோரில் ‘Marxist Reader’ என்ற பெயரில் உள்ள செயலியைத் தேடி தரவிறக்கவும். அதில் ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகளில் மட்டும், அதனை கேட்பதற்கான பொத்தான்கள் தெரியும். அல்லது இணையத்தில் நேரடியாக marxist.tncpim.org என்ற தளத்தில் சென்று கட்டுரைகளைக் கேட்கலாம்.

விவாதக் களம் அறிமுகம்
இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்ட ஜனவரி 28 முதல், மார்க்சிஸ்ட் செயலிக்கு உள்ளாகவே விவாதத்திற்கான வசதியும் ஏற்படுத்தியுள்ளோம். மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழுவின் ஒருங்கிணைப்பில் வாரம் ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு விவாதம் ஒருங்கிணைக்கப்படும். தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட பதிவு செய்துகொள்வதற்கான வசதியும் செயலியில் வழங்கப்பட்டுள்ளது.
– மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழு