மேட்டுப்பாளையம், ஜன.31-
கோவை – மேட்டுப்பாளையம் இடையே இன்று முதல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது,

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இரவு 7:45 மணிக்கு புறப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை வழியாக சென்று மறுநாள் காலை 5:05 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9:05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6:15 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். சென்னையில் இருந்து உதகை செல்ல விரும்புவோர் இந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் மேட்டுப்பாளையம் வந்தடைந்த பின்னர் சுமார்ஒரு மணிநேர இடைவெளியில் இங்கிருந்து காலை 7:10 மணிக்கு உதகை செல்லும் மலைரயிலில் பயணிப்பது வழக்கம். இந்நிலையில், நாட்டின் மிக பழமையான (1882) ரயில் நிலைங்களில் ஒன்றான மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தின் நடைமேடை 14 பெட்டிகள் நிற்கும் அளவில் உள்ளதை 23 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு நீட்டிப்பு செய்யும் பணி வியாழக்கிழமை முதல் முழு வேகத்தில் துவங்கவுள்ளதால் பிப்.1 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை மொத்தம் 31 நாட்கள் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்
யப்படுகிறது.

எனவே, பயணிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து உறுதிசெய்யப்பட்ட பயணிகளுக்கு இவ்விரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே இலவச பேருந்து வசதியினை வழங்கவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இவ்விரண்டு ரயில் நிலையங்களிலும் இதற்கான உதவி மையங்கள் செயல்படும் என்றும், விபரங்களுக்கு 90039 56955 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி நான்கு முறை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலும் வியாழக்கிழமை முதல் காரமடை ரயில் நிலையத்தில் இருந்தே இயக்கப்படவுள்ளது. அதேநேரம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ரயில் வழங்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: