புதுதில்லி;
பாஜகவின் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது ஏமாற்று வித்தை என்றும், சாத்தியம் அற்றது என்றும் மத்திய முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் சாடியுள்ளார்.ப.சிதம்பரம் எழுதிய ‘Speaking Truth to Power’  என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா தில்லியில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த நூலை வெளியிட்டார்.

இந்நிகழ்வுக்கு பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் ப. சிதம்பரம் பேசியிருப்பதாவது:
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அதுவும் 30 மாநிலங்களைக் கொண்ட நாட்டில் தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லாதது. இது இன்னொரு தேர்தல்கால ஏமாற்று வித்தை.

ஒரே தேசம், ஒரே வரி என்கிற, மோடி அரசின் ஏமாற்று வித்தையைப் போல ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதும் மாய்மாலம்தான். எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை மாநில கட்சிகள். அவர்களது செயல்திட்டங்கள் குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டது. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பது கடினம்.ஒரு மாநில அரசு நாளையே கவிழ்கிறது என்று வைத்துக் கொண்டால், மக்களவைத் தேர்தல் வரும் வரை 4 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியேவா அம்மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும்? இது சாத்தியமே இல்லாத ஒன்று.

நாட்டில் 75 லட்சம் வேலைவாய்ப்புகளை மார்ச் மாதத்துக்குள் உருவாக்கப் போகிறோம் என்கிறது மத்திய அரசு. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருந்த போது பிஎப் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 23 லட்சமாக உயர்ந்தது. இதுவே 8 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டியபோது மேலும் 25 லட்சமாக அதிகரித்தது.

ஆனால் தற்போது 2016-17-இல் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் இது எப்படி 75 லட்சமாக உயரும்? இது எப்படி சாத்தியமாகும்?
இவ்வாறு ப. சிதம்பரம் பேசியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: