கோவை, ஜன. 31-
நாட்டில் நச்சுசூழல் உருவாகியுள்ள நிலையில் கம்யூனிச இயக்கங்கள் மற்றும் திராவிட இயக்கங்கள் வலுப்பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் என மூத்த எழுத்தாளர் பழ.கருப்பையா பேசினார்.

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி செவ்வாயன்று கோவை புலியகுளத்தில் “கோவை மக்கள் மேடையின்” சார்பில் மக்கள் ஒற்றுமை மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு உறுதிமொழியேற்பு – பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் வெண்மணி வரவேற்புரையாற்றினார். சிஐடியு மாவட்டதலைவரும், கோவை மக்கள் மேடையின் ஒருங்கிணைப்பாளருமான சி.பத்மநாபன் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதைத்தொடர்ந்து மூத்த எழுத்தாளர் பழ.கருப்பையா பங்கேற்று பேசுகையில், கடைசி வரை ராம்..ராம்..என உச்சரித்த இறை நம்பிக்கையாளரான காந்தி, இந்துத்துவவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று.இன்றுவரை இந்திய நாடு மதச்சார்பற்ற நாடாக திகழ்வதற்கு காந்தி உருவாக்கிய கொள்கைதான் முதன்மையானது. ஆனால், இன்று ஒரு நாடு, ஒரு மொழி, கோவிலில் சமஸ்கிரதம், பேசுவதற்கு இந்தி, ஒரே தத்துவம் இந்துத்துவா, ஒரே வரி ஜிஎஸ்டி, ஒரே தலைவர் மோடி என்கிறார்கள். மாநிலத்தின் வரி போடுகிற அதிகாரத்தை பிடுங்கி நாட்டை முனிசிபாலிட்டியாக்கி விட்டார்கள்.

ஒரு அதானியின் பணத்தில்தான் ஒரு மோடி உருவானார். மோடி உருவானதற்கு பிறகு பல அதானிகள் உருவாகியுள்ளனர். மோடியை அதானிகள் உருவாக்குவார்கள். அதானிகளை மோடிகள் உருவாக்குவார்கள் என்கிற நச்சு சூழல்தான் தற்போது நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட நிலைகள். நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் அம்பானி, அதானிகளின் ஏஜென்டுகள். இவர்களின் மூலம்தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். கம்யூனிச இயக்கம், திராவிட இயக்கம் நாட்டில் வழுவிழந்து இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல. திராவிட கழகம் தோன்றியதற்கான தேவை நிறைவேறிவிட்டது. இனி அவை எதற்கு என நான் எண்ணியது உண்டு.

ஆனால், தற்போது அனைவரும் இணைந்து இன்னும் பல மடங்கு வீரியத்துடன் போராட வேண்டும். அந்த அளவிற்கு நாடு சீர்கெட்டு கிடக்கிறது என்பதை சின்ன சங்கராச்சாரின் பேச்சுக்கு பிறகுதான் புரிந்து கொண்டேன். ஆகவே, இடதுசாரி இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அத்தகைய கொள்கை, கோட்பாடு உள்ளவர்கள் கோவை மக்கள் மேடையை உருவாக்கியுள்ளனர். இத்தகைய விஷயங்களை பேசுவதற்கு மக்கள் மேடை உருவாக்கப்பட்டிருக்கிறது. சமய சார்பற்ற மேடையாக மதங்களை தாண்டி மனிதத்தை வளர்க்கும் மேடையாக இது திகழும்.மேலும், தமிழை தாய் என்று போற்றுவது நமது மரபு சார்ந்தது. நாம் நதியை, மண்ணை, மொழியை தாய் என்று போற்றுவதுதான் தமிழனின் மரபு. அந்த வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசை ஒலிக்கையில் எழுந்து நிற்கவில்லையென்றால், ஏழரை கோடி தமிழ் மக்களுக்கு எதிராய் நிற்கிறாய் என்று பொருள். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கமாட்டார்களாம்.கேட்டால் தியானத்தில் இருந்தார்களாம். சரி அப்படியே கடைசிவரை தியானத்தில் இருக்க வேண்டியதுதானே. தேசிய கீதம் பாடும்போது மட்டும் எப்படி தியானம் கலைந்து எழுந்துநின்றிர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது கடவுள் வாழ்த்துபோல அதற்கு சட்ட நெருக்கடி ஏதும் கிடையாது. ஆனால், தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கவில்லையென்றால் சங்கராச்சாரியராக இருந்தாலும், சட்டம் தண்டனை வழங்கும் என்பதால் எழுந்து நின்றார். எங்கள் நிலப்பரப்பில் வாழும் நீங்கள் தமிழுக்கு மரியாதை செய்ய மனமில்லையென்றால் வேறு மாநிலத்திற்கு சென்றுவிடுங்கள். பெரியாரைப்போல கடவுள் மறுப்பாளரும்,கடவுள் வாழ்த்துக்கு எழுந்து நிற்பதுதான் எங்கள் மரபு. அதனால்தான் அவர் பெரியார், நீ சிறியார். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், விசிக மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன், சிபிஐ-எம்எல் (எல்) என்.கே.நடராஜன், சமூக நீதிக்கட்சியின் தலைவர் ந.பன்னீர்செல்வம், மனித உரிமை கழகத்தின் ச.பாலமுருகன், புஜதொமு திலீபன் மற்றும் வழக்கறிஞர் கலையரசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம், கருத்துரிமையை பாதுகாப்போம் என்கிற உறுதிமொழியை தலைவர்கள் வாசிக்க கூட்டத்தில் பங்கேற்றோர் உறுதியேற்றனர். முடிவில், திராவிடர் கழகத்தின் நேருதாஸ் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.