திருப்பூர், ஜன.31 –
ஆயுதங்களை விட பசித்த வயிறு பயங்கரமான ஆயுதம் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார்.

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வழக்கறிஞர் எஸ்.பொன்ராம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தேசம் காத்தல் செய் என்ற தலைப்பில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் உரையாற்றுகையில், ஒரு தேசம் பாதுகாப்பாக இருக்க ஆயுதங்களின் வலிமை முக்கியமல்ல, அந்த நாட்டு மக்கள் வயிற்றுப் பசி இன்றி வாழ வேண்டும். பசித்த வயிறு ஆபத்தான ஆயுதமாக மாறும். ஆனால் நம் நாட்டில் உணவு என்பது இன்று கேள்விக்குறியாக மாறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் உணவு, தொழில், பாதுகாப்பு எல்லாம் இன்றைய ஆட்சியாளர்களால் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு எதிராக உழைக்கும் மக்கள், நேற்று தொழிலாளிகளாக இருந்து இன்று சிறு உற்பத்தியாளர்களாக மாறியவர்கள் என பெரும்பான்மை மக்கள் ஒன்றுபட்டுக் குரல் எழுப்பிப் போராடினால்தான் தேசத்தைக் காக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, வண்ணங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.காமராசு பேசினார். அப்போது பன்மைத்துவத்தின் முக்கியத்துவத்தையும், அதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எதிர்கொள்வது பற்றியும் அவர் விளக்கினார். மேலும், லிங்க்ஸ் சௌகத் அலி, எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், எஸ்.எஸ்.பத்மநாபன், சிஸ்மா கே.எஸ்.பாபுஜி உள்பட திருப்பூர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். இன்ஜினியர் ஸ்டாலின்பாரதி வரவேற்றார். புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களைப் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: