ஈரோடு, ஜன. 30-
3- ஆவது ஊதியக்குழுவை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று பிஎன்என்எல் அனைத்து சங்கங்களின் சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

தொலைத்தொடர்புத் துறையின்கீழ் இயங்கி வரும் தொலைத்தொடர்பு கோபுரங்களின் பராமரிப்புக்கென தனி நிறுவனம் அமைப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 2 ஆவது ஊதியக்குழுவில் உள்ள குளறுபடிகள், முரண்பாடுகளைக் களைய வேண்டும். 3 ஆவது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து சங்கங்களின் சார்பில் 5 நாள் நூதனப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டம் செவ்வாயன்று சத்தியாகிரக போராட்டமாக துவங்கியது.

இதன் ஒருபகுதியாக, ஈரோட்டில் உள்ள தொலைத்தொடர்புத் துறை அலுவலகத்தில், காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத்தலைவர் அய்யாவு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், பிஎஸ்என்எல் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கோவை:
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் என்எப்டிஈ மாவட்ட செயலாளர் எல்.சுப்பராயன், எஸ்என்ஈஏ மாவட்ட செயலாளர் டி.கே.பிரசன்னா, ஏஐபிஎஸ்என்எல்ஈஏ மாவட்ட செயலாளர் எஸ்.சத்திவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தின் பொள்ளாச்சி வட்ட கிளை தலைவர் வி.சசிதரன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் பி.தங்கமணி, வட்ட கிளை செயலாளர் ஆர்.பிரபாகரன், எஸ்என்இயூ சங்கத்தின் ஆர்.அன்பரசு, என்எப்டியூ எம்.பிரிட்டோ அலெக்சாண்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சேலம்
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அனைத்து சங்க மாவட்ட செயலாளர்கள் இ.கோபால், ஆர்.மனோகரன், எம்.சண்முக சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர்:
திருப்பூர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் கே. வாலீசன், என்எப்டிஇ தலைவர் என்.ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். அதிகாரிகள் சங்க நிர்வாகி டி, கேசவன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், என்எப்டிஇ செயலாளர் அந்தோனி மரியபிரகாஷ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.முகமது ஜாபர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்து கலந்து கொண்டனர்.இதேபோல், பல்லடம் தொலைப்பேசி நிலையம் முன்பு ஊழியர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.