தீக்கதிர்

பெற்றோர்களால் தேவையற்றவர்களாக கருதப்படும் 2.1 கோடி இந்திய பெண் குழந்தைகள்…!

புதுதில்லி;
இந்தியாவில் 2 கோடியே 10 லட்சம் பெண் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்கள் ‘தேவையில்லாமல் பெற்று விட்டோம்’ என்று கருதுவதாக இந்திய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2016-17 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், அதில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஓர் ஆண் குழந்தை பிறக்கும்வரை தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தால் இந்தியாவில் ‘தேவைப்படாத’ குழந்தைகளாக 2 கோடியே 10 லட்சம் பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

கருவின் பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வது போலில்லாமல் இந்த வடிவத்தில் ஆண் குழந்தைக்கான விருப்பம் நுட்பமாக வெளிப்படுவதாக தெரிவிக்கும் நிதியமைச்சகம், இந்தப் போக்குகளால் பெண் குழந்தைகளுக்கு குறைவான வளங்களே கிடைக்கும் என்றும், ‘மகன் தான் வேண்டும்’ என்ற இந்திய சமூகத்தின் எண்ணமானது, இந்திய சமூகம் சுய பரிசீலனை செய்துகொள்ளவேண்டிய ஒன்று என்றும் தெரிவித்துள்ளது.

எந்தப் பாலினத்தை சேர்ந்த குழந்தை என்பதை சோதனை செய்து பார்த்து கருகலைப்பு செய்யப்பட்டதாலும், ஆண் குழந்தைகளுக்கே அதிக கவனிப்பு அளிக்கப்பட்டதாலும், 63 மில்லியன் பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர் என்றும் அறிக்கையானது, அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவிக்கிறது.

ஆண் குழந்தைதான் தேவை என்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா என்பதையும், மிகக் குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மேகாலயா என்பதையும் பட்டியலிட்டுள்ள அறிக்கை, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ஏழு வயதுக்குக் குறைவாக உள்ள 1,000 பெண்களுக்கு, இணையாக 1,200 ஆண்கள் உள்ளதாக கூறுகிறது.

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவது சட்டத்திற்கு புறம்பானது. ஆனால், இந்தியாவில் இது தொடர்ந்து நடக்கிறது. இதன்மூலம் தேர்வு செய்யப்பட்ட கருக்கலைப்பும் நடக்கிறது.

சொத்து மகனுக்கே செல்ல வேண்டும், மகளுக்கு போகக் கூடாது; மகளை திருமணம் செய்து கொடுக்க வரதட்சணை அளிக்க வேண்டும்; திருமணத்துக்குப் பிறகு, பெண்கள் கணவன் வீட்டிற்குத்தானே செல்லப் போகிறார்கள் என்பன போன்ற சிந்தனைகள்தான், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்கான கலாச்சார ரீதியான காரணங்களாக அமைந்திருப்பதையும் அறிக்கை அலசியுள்ளது.