கோவை, ஜன.30-
கோவையில் பில்ட் இன்டெக் 2018 என்ற தலைப்பில் சர்வதேச கட்டடம் மற்றும் கட்டுமான வர்த்தக கண்காட்சி பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து பில்ட் இன்டெக் தலைவர் எம்.கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- கோவை கொடிசியா தொழிற் கண்காட்சி அரங்கில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 300 அரங்குகளுடன் சர்வதேச கட்டடம் மற்றும் கட்டுமான வர்த்தக கண்காட்சி பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை தவிர மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், புதுதில்லி, ஹரியானா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சியில் கட்டுமானத் துறையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களான கான்கிரீட்களில் ஏற்படும் விரிசலை தடுக்கும் மேக்ரோ செயற்கை ஃபைபர், குர்ஜோன் கேலிபிரேடட் பிளைவுட்ஸ், நவீன குடிநீர் சுத்தகரிப்பு தொழில்நுட்பங்கள், நவீன கட்டுமான இயந்திரங்கள், ஈரான் நாட்டின் நவீன தொழில்நுட்பமான ஜிப்சம் வால் பிளாஸ்ட் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இது தவிர கட்டுமானத்திற்கு தேவையான முறையில் எம் சாண்டின் தரத்தை மேம்படுத்தும் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதேபோல், வீட்டிற்கு தேவையான சோலார் பேனல்கள், சூரிய ஒருங்கிணைப்புகள், இன்வெர்ட்டர்கள், பேட்டரிகள் மற்றும் மின் அமைப்புகள், ஜெனரேட்டர்கள், எல்.இ.டி. விளக்குகள், நீச்சல் குள தொழில்நுட்பம், குளியலறை உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. மேலும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் நேரடி செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. கட்டுமானக் கண்காட்சியுடன் மரம் மற்றும் ஸ்டீல்களால் தயாரிக்கப்பட்ட பர்னிச்சர் பொருள்களின் கண்காட்சியும் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் கட்டுமானப் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டடக் கலை வல்லுநர்கள், கட்டட அமைப்பாளர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: