திருப்பூர், ஜன.30-
திருப்பூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை வீடு உள்பட 2 வீடுகளில் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அவினாசி ரோடு அம்மாபாளையத்தை அடுத்த ராக்கியாபாளையம் உமையஞ்செட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (64). இவர் கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழயைன்று (ஜன.27) மாலை சிவகுமார் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் மதியம் வீடு திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய வீட்டு படுக்கையறையின் ஜன்னல் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 8 பவுன் தங்கநகைகள் மற்றும் அங்கிருந்த வெள்ளிபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகுமார் அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இதேபோல் ராக்கியாபாளையத்தை அடுத்த சிவசக்தி நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (49). இவர் கருவம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பிரிவு பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஞாயிறன்று மனைவியுடன் கோவை சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11பவுன் தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக சங்கரலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் காவல்துறை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டும் விசாரணை நடத்தினர். இந்த 2 கொள்ளை சம்பவங்களும் ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல்துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.