திருப்பூர், ஜன.29-
தமிழகத்தில் அநியாயமாக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திங்களன்று அனைத்துக் கட்சியினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கைதாகினர்.

தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசு பேருந்துக் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி இருப்பதை கைவிட வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும்  அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திங்களன்று திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி திருப்பூர் மாநகரில் அனுப்பர்பாளையம், எஸ்.ஏ.பி. தியேட்டர் அருகில், பூலுவபட்டி நால்ரோடு, புதிய பேருந்து நிலையம், கருவம்பாளையம் தாடிக்காரன் முக்கு, காங்கேயம் கிராஸ் சிடிசி பணிமனை அருகில், ராக்கியாபாளையம் பிரிவு, பல்லடம் ரோடு வித்யாலயம் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் எதிர்க்கட்சிகளின் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மேலும், பல்லடம் நால்ரோடு, பல்லடம் பேருந்து நிலையம், பொங்கலூர் பேருந்து நிறுத்தம், பெருமாநல்லூர் நால்ரோடு, அவிநாசி புதிய பேருந்து நிலையம், சேவூர் கைகாட்டி, குன்னத்தூர் பேருந்து நிலையம், செங்கப்பள்ளி நால் ரோடு, காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலைபேட்டை, மடத்துக்குளம், குடிமங்கலம் மாவட்டம் முழுவதும் 46 இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் மற்றும் திமுக சார்பில் கே.செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.ரவி, காங்கிரஸ் ஆர்.கிருஷ்ணன், மதிமுகவின் சு.சிவபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

சேலம்:
சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, ஜலகண்டாபுரம், ஓமலூர், வாழப்பாடி, மேட்டூர், ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர்கள் பி.தங்கவேலு, கே.ஜோதிலட்சுமி, மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, திமுக மாநகர மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், விசிக மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், சிபிஐ மாநில குழு உறுப்பினர் பரமசிவம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கைதாகினர்.

நாமக்கல்:
நாமக்கல் பேருந்து நிலையம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, இராசிபுரம், பரமத்தி வேலூர், நாமகிரிப்பேட்டை, எலச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஏ.ரங்கசாமி, மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகரக் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர்.

ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி, சித்தோடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.துரைராஜ், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், விடுதலை சிறுத்தைகள் மண்டல தலைவர் விநாயகமூர்த்தி, காங்கிரஸ் கட்சி நிர்வாகி மக்கள் ஜி.ராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பேருந்து கட்டண உயர்விற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி கைதாகினர்.

கோவை:
கோவையில் காந்திபுரம், பீளமேடு, சூலூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம்,பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கணபதி, இராமநாதபுரம்,காரமடை, மதுக்கரை, ஆனைமலை, வைசியால் வீதி, உக்கடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 78 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றன. இப்போராட்டங்களுக்கு திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் முத்துசாமி, நா.கார்த்திக் எம்எல்ஏ, சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.கருணாகரன், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய, தாலுகா நிர்வாகிகள் உள்பட 5 ஆயி
ரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்

நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், தேவாலா, நாடுகாணி, உப்பட்டி, பிதர்காடு, மசினக்குடி, அருவங்காடு, தூதூர்மட்டம். கட்டபெட்டு, வண்டிச்சோலை உள்ளிட்ட 40 இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் திமுக மாவட்ட செயலாளர் ப.மு.முபாரக், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, இராமன்குட்டி உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.