உதகை, ஜன.29-
கூடலூரில் அனைத்து கட்சிகள் சார்பில் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று மண்ணுரிமை மீட்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூடலூரில் உள்ள ஜானகியம்மாள் மண்டபத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க, முஸ்லீம் லீக், தேமுதிக, ம.ம.க உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் சங்கங்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். அனைத்து சிறு விவசாயிகள் நிலங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். பட்டாவிற்கான தடையாணை 1168ஐ ரத்து செய்ய வேண்டும். டேன் டீ -யை மூடு விழா நடத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 23 ஆம் தேதியன்று கூடலூர் புதிய பேருந்து நிலையம் முன்புள்ள சாலையில் அமர்ந்து சமைத்து சாப்பிடுவது, குடும்பத்துடன் உறங்குவது உள்ளிட்ட மண்ணுரிமை மீட்பு போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு தலைமை தாங்கினார். காங்கிரஸ்கட்சியின் ஷாஜி துவக்க உரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், கூடலூர் தாலுகா கமிட்டி செயலாளர் குஞ்சுமுகமது, எருமாடு கமிட்டி செயலாளர் கே.ராஜன், வி.சி.க மாவட்ட செயலாளர் சகாதேவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே, ராஜ்குமார், மாவட்ட இணை செயலாளர் முருகன், ஏஐடியுசி மாவட்ட இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், முஸ்லீம் லீக் அனிபா மற்றும் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.