திருப்பூர், ஜன. 28-
திருப்பூர் மாவட்டம் பொங்கலுார், பல்லடம், மங்கலம், சூலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களுடை தென்னை மரங்களிலுள்ள பாளைகளை அறுத்து பானை வைத்து இளநீர் தேக்கி நீரா பானம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், தலைமையில் காவல் துறையினர் பொங்கலுார் பகுதிகளில் நீரா பானத்திற்காக தென்னை மரங்களில் கட்டப்பட்டுள்ள பானைகளை உடைத்து பாளைகளை அறுத்து எரித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கேட்டத்திற்கு கள்ளு இறக்கி விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளதாக கூறினார்.மேலும், மதுவிலக்கு பிரிவு உதவி காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் விவசாயிகளை அவமரியாதையாக பேசியுள்ளார்எனக்கூறி திங்களன்று கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்நிலையில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிக்க வந்தனர். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தி 10 விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

அவர்கள் ஆட்சியரை சந்தித்து நீரா பானம் மற்றும் கள் இறக்குவது குற்றம் என்றால் அதற்கு எங்கள் மீது எவ்வளவு வழக்கு வேண்டும் என்றாலும் பதிவு செய்துக் கொள்ளலாம். எங்களால் அரசு கொடுத்து இருக்கும் முறைப்படி கள் இறக்க இயலாது என்றார். மேலும், போலீசார் பானைகளை உடைப்பது, தென்னையை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.மனுவை பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் கூறியது: நீரா பானம் அரசு அறிவித்தப்படிதான் இறக்க வேண்டும். உங்களது அமைப்பின் தலைமையில் பேசி முடிவு எடுங்கள், காவல் துறையினர் வரும் காலங்களில் இதுபோன்று கடுமையாக நடந்து கொள்ளாமல் இருக்க அறிவுறுத்துவதாக விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: