சென்னை, ஜன.28-
ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள், கல்வியாளர்களின் ஆலோசனைக்கூட்டம் திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரிகளில், பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரும் இருசட்டத்திருத்த மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத்தலைவர் ஒப்புதலைப் பெறும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முழு மனதோடு தீவிரமாக ஈடுபட
வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை மாற்றி, தேசிய மருத்துவ ஆணையம் என்று உருவாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது. உயர் மருத்துவக் கல்வி இடங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 100 விழுக்காடு இடங்களையும் தமிழ்நாட்டைச்சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிப்ரவரி 5 ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்றும் அரசியல் கட்சிகளின் சமூக அமைப்புகளின் மாணவர்கள், இளைஞர்கள் அமைப்பினர் இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த சமூக நீதிப் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொண்டு நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வது என்றும், முதற்கட்டமாக வரும் பிப்ரவரி 10ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புப் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.