திருப்பூர், ஜன. 28 –
பெருந்துறை, ஊத்துக்குளி வட்டாரத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அமைப்புரீதியாகத் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றிய மூத்த தோழர் சாலப்பாளையம் எஸ்.பி.கந்தசாமியின் 27ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக செங்கப்பள்ளியில் நடைபெற்ற நினைவு தினப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் வழங்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தலைமறைவாக இருந்த காலத்தில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கந்தசாமி. காவல் துறையின் சித்ரவதைகளை தாங்கிக் கொண்டு கட்சித் தலைவர்களைக் காட்டிக் கொடுக்காமல் பாதுகாத்தவர். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தலித் மக்களைத் திரட்டி ஊத்துக்குளி கைத்தமலையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார் எஸ்.பி.கே. என அழைக்கப்படும் எஸ்.பி.கந்தசாமி. 27 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார். வெள்ளியன்று சாலப்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலிநிகழ்ச்சி கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி கலந்து கொண்டு செங்கொடியை ஏற்றி வைத்தார். திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், பெருந்துறை தாலுகா செயலாளர் கே.குப்புசாமி, ஊத்துக்குளி தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி, மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கே.சரஸ்வதி, சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ.கந்தசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.மணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுகா செயலாளர் கே.எஸ்.ராமசாமி, வாலிபர் சங்க தாலுகா செயலாளர் கே.லெனின், மாணவர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எம்.நவீன் உள்ளிட்டோர் பங்கேற்று எஸ்.பி.கந்தசாமியின் நினைவைப் போற்றி உரையாற்றினர். நிறைவாக சாலப்பாளையம் கிளைச் செயலாளர் கே.வெங்கடாசலம் நன்றி கூறினார்.

ரூ.1.51 லட்சம் கட்சி நிதியளிப்பு
எஸ்.பி.கே. நினைவு தினப் பொதுக்கூட்டம் செங்கப்பள்ளி பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. இதில் செங்கப்பள்ளி கிளைச் செயலாளர் எந்.பி.முத்துசாமி தலைமை வகித்தார். ஆர்.சுப்பிரமணி வரவேற்றார். ஈரோடு மாவட்டக்குழு உறுப்பினர் மூத்த தலைவர் இரா.திருத்தணிகாசலம் சிறப்புரை ஆற்றினார். திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.சரஸ்வதி மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் உரையாற்றினர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணனிடம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக நீலாக்கவுண்டம்பாளையம் கிளைச் செயலாளர் என்.கே.பழனிசாமி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.