கோவை, ஜன. 28-
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி 29 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் 750 காளைகளும், 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். பொங்கல் விழாவினை ஓட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. மதுரையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி முடிந்ததை தொடர்ந்து தமிழகத்தின் பிற பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. கோவையில் 1979 ஆம் ஆண்டு சின்னப்பதேவர் தலைமையில் கோவை வஉசி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து தென்மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது.

கடந்தாண்டு ஜல்லிக்கட்டிற்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருந்ததை கண்டித்து தமிழகத்தில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய பாஜக அரசு மக்களின் போராட்டத்தால் பணிந்தது. இதனைத்தொடர்ந்து மாநில அரசு அவசர சட்டத்தை பிறப்பித்து ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு சில இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஆனால் இந்தாண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை, வெள்ளலூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் ரோடு, கஞ்சிகோனாம்பாளையம் பிரிவில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் அமர பிரமாண்ட கேலரி மற்றும் வாடிவாசல் அமைக்கப்பட்டது. ஞாயிறன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மற்றும் எம்.பி, எம்எல்ஏ.க்கள் ஓம்கார் பவுண்டேசன் நிர்வாகி டோனிசிங், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, அரியலூர், விருதுநகர், கோவை உட்பட தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகள் கொண்டு வரப்பட்டன. இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுபிடி வீரர்கள் கோவையில் குவிந்தனர். முறையான சோதனை மற்றும் சட்டவிதிமுறைகளை பின்பற்ற தகுதியான 450 நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தகுதியுள்ள 750 காளைகள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டன. போட்டி துவங்கியதும், காளைகளின் மூக்கணாங்கயிறு வெட்டப்பட்டு ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே திறந்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டனர். சில காளைகள் திமிறிக்கொண்டு பாய்ந்தன. ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை மாடு பிடி வீரர்கள் மாற்றப்பட்டனர். திமிறும் மாட்டின் மதிலை விடாமல் வீரர்கள் பிடிக்கும்போது, பார்வையாளர்களிடையே விசில் சத்தம் விண்ணை முட்டியது.வாடிவாசல் திறந்து விடப்பட்டு எந்த வீரர்களிடமும் பிடிபடாமல் காளைகள் ஓட்டம் பிடித்தன. காளைகளுக்கும் வீரர்களுக்கும் நீயா நானா போட்டி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மாடுகளை பிடித்த வீரர்களுக்கு கார், பைக், தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியை காண கோவை மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். கார், பஸ், வேன், டூவீலர்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் கேலரி முழுவதும் நிரம்பி வழிந்தது. கேலரியில் இடம் இல்லாதவர்கள் கீழ்பகுதியில் நின்று பார்வையிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: