பேருந்து பயணக் கட்டணம் தாறுமாறாக உயர்ந்ததால் ஏற்பட்ட பயணிகளின் அலறலும், குமுறலும் அந்த அதிகாலைப் பொழுதிலும் எதிரொலித்தது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திலிருந்து தக்கலை செல்லும் அரசுப் பேருந்து அது. “பத்து ரூவா டிக்கட்ட இருவத்திரண்டு ரூவாயா கூட்டியிருக்கானே இந்த எடச்சாடி” என்று ஒரு முதியவரின் குரல் சக பயணிகளின் குமுறலை கொட்டும் துவக்கமாக அமைந்தது. ஒக்கி புயலில் சீரழிந்து கிடக்கும் மோசமான சாலை பேருந்தை குலுக்கி எடுத்தது. ஆனாலும் கட்டண உயர்வு குறித்த உரையாடல்கள் ஓங்கி ஒலித்தன.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், அவர்களது ஓய்வூதிய பயன்கள் போன்றவற்றை அரசே களவாடியது, ஊதிய உயர்வு ஒப்பந்த மோசடி, நீதிமன்ற தலையீடு, கட்டண உயர்வு வரை ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டனர். அரசை மட்டுமல்லாது நள்ளிரவில் உயர்த்தப்பட்ட கட்டணத்தால் பரிதவித்தபோது வெறும் கண்டன அறிக்கையோடு பதுங்கிக் கொண்ட எதிர் கட்சிகளையும் விளாசினார்கள். கட்டண உயர்வுக்கு ஊழியர்களின் சம்பள உயர்வு தான் காரணம் என திரும்பத்திரும்ப அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் 120 சதவீதம் கட்டண உயர்வுடன் பயணச்சீட்டு கொடுக்க வந்த நடத்துநரை எவரும் எதிரியாக பார்க்கவில்லை. அது நியாயத்தின் பக்கம் மக்கள் நிற்கிறார்கள் என்பதை உணர்த்தியது.

மதுரை செல்ல வேண்டும். பேருந்து கட்டணம் தந்த அதிர்ச்சியோடு நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றபோது மகிழ்ச்சி. கோவை செல்லும் பயணிகள் ரயில் புறப்படத் தயாராக நின்றது. ஏழைகளுக்கு ஏற்ற கட்டணம் ரூ.50. நிலையத்திலிருந்து 7.10 மணிக்கு பட்ட ரயில் புறப்பட்டது. அடுத்த 20 நிமிடங்களுக்குள் தோவாளைக்கு முன்னதாகவே ஒற்றை ரயில் தடத்தில் ரயில் நின்றுவிட்டது. இறங்கி விசாரிக்கவும் முடியாத அளவுக்கு தண்டவாளம் வரை புதர் மண்டிக்கிடந்தது. எஞ்ஜின் கோளாறு என்கிற தகவல் சற்று நேரத்தில் கிடைத்தது. நேரம் செல்லச் செல்ல பயணிகளின் தவிப்பு அதிகரித்தது. திருநெல்வேலி நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராக (ஸ்டெனோ) பணியாற்றும் சக பயணிக்கு நீதிமன்ற நடவடிக்கை தன்னால் பாதிக்கும் என்கிற பதற்றம். பஸ்லதான் போவேன் சார், டிக்கட் கூட்டினதால இனி ரயில்ல போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் என்று பேசிக்கொண்டிருந்தவர் ரயில் நின்ற பிறகு அரை மணி நேரத்துல சரியாயிடுமா? வேற எஞ்ஜின் வருமா என்றெல்லாம் கேட்கத் தொடங்கினார். தூரத்தில் தெரிந்த சாலையை அணுக முடியாத அளவுக்கு வயல்காடு நீர் நிறைந்தும் சகதியாகவும் காணப்பட்டது.

பசியோடும் பரிதவிப்போடும் சுமார் 2 மணி நேரம் சென்றது. அதன்பிறகு நாகர்கோவிலிலிருந்து வந்த ரயில் எஞ்ஜின் ஒருவழியாக ரயிலை தள்ளி ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது. அங்கு இரண்டு மணிநேரம் காத்திருந்த பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணிநேரம் தாமதமாகவும், பணகுடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாகவும் கடந்து சென்றன. ஈரோடு 11222 எண்ணிடப்பட்ட அந்த பழைய எஞ்ஜினில் பழுது நீக்கும் முயற்சியை ஆரல்வாய்மொழியில் ஒரு மணிநேரம் மேற்கொண்டனர். அது சாத்தியமில்லை என தெரிந்த பிறகு பின்பக்கத்திலிருந்து தள்ளி வந்த எஞ்ஜின் முன்பக்கத்திற்கு கொண்டு வந்து இணைக்கப்பட்டது. அரை மணி நேரத்தில் செய்ய வேண்டிய பணியை அலட்சியப்படுத்தியதே இந்த 3 மணிநேர தாமதத்திற்கு காரணம் என பயணிகள் கோபத்துடன் கூறினார்கள். ஒரு வழியாக அங்கிருந்து ரயில் ஓடத் தொடங்கியது.

திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம் என அனைத்து ரயில் நிலையங்களிலும் அந்த ரயிலுக்காக காத்திருந்த பெருங்கூட்டம் மாற்று வழி தேடி கலைந்ததை அறிந்துகொள்ள முடிந்தது. மதுரையில் வந்தபோது ரயிலிலிருந்து இறங்கவே வழிவிடாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்த மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரயில்பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான விளம்பரம் அன்றைய நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. அதன் தலைப்பு வாசகம் இவ்வாறு இருந்தது. “தங்கள் சிறப்பான பயண அனுபவத்திற்கு எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்கிறோம்”. பிரதமர் மோடியின் படத்துடன் வெளியான இந்த விளம்பர வாசகம் அவரது வாக்குறுதிகள் போல் உண்மைக்கு வெகுதூரத்தில் இருந்தது.

சி.முருகேசன்

Leave a Reply

You must be logged in to post a comment.