சேலம், ஜன.28-
சேலம் சிறையில் ஆயுள் கைதியை சென்னை புழல் சிறைக்கு மாற்ற லஞ்சம் வாங்கிய சிறையில் உள்ள எழுத்தர் கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து இவர் பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் சரவணன் வயது 37. இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற கோரியிருந்தார். இதற்காக சிறையில் உள்ள எழுத்தர் விஜயக்குமார் ( 40 ) சிறை மாற்றத்திற்கான கோப்பை தயாரித்து தர தனக்கு ரூ 10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்நிலையில் ஆயுள்தண்டனை கைதி சரவணன் தனது நண்பர் மகேந்திரகுமார் மூலம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரைப்படி எழுத்தர் விஜயக்குமாரிடம் லஞ்சம் பணத்தை மகேந்திர குமார் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விஜயக்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.பின்னர் இவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயக்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சேலம் சிறை கண்காணிப்பாளரிடம் அறிக்கை அளித்தனர். அதனைதொடர்ந்து எழுத்தர் விஜயக்குமாரை சிறை கண்காணிப்பாளர் தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: