புதுதில்லி;
சங்- பரிவாரங்களின் கடும் மிரட்டலுக்கு இடையே வெளியான ‘பத்மாவத்’ திரைப்படத்திற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இப்படம் வெளியான 2 நாட்களில் 49 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் படம் பத்மாவத். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர்கள் ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ராணி பத்மினியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ‘பத்மாவத்’ எடுக்கப்பட்டிருப்பதாக கூறி, பிராமணர் சங்கம், பாஜக, ராஜ்புத் கர்னி சேனா, சத்ரிய சமாஜ் உள்ளிட்ட சாதிய மதவாத அமைப்புக்கள் படக்குழுவினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தன.

எனினும் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமையன்று பத்மாவத் வெளியானது. அப்போதும்கூட பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பத்மாவத்தை திரையிட அனுமதிக்கவில்லை.எனினும் பல்வேறு மிரட்டல்களுக்கு இடையே பத்மாவத் திரைப்படம் கடந்த 2 நாட்களில் 49 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெளியான ’பத்மாவத்’ திரைப்படம் முதல் நாளன்று இந்தியாவில் 19 கோடி ரூபாய் வசூல் செய்தது. வெள்ளிக்கிழமை அது வசூல் 30 கோடியாக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை வரை உள்நாட்டு வசூலாக மட்டும் 49 கோடி ரூபாயை அள்ளிக் குவித்துள்ள ’பத்மாவத்’ சனி, ஞாயிற்றுக்கிழமைக்குள் மேலும் ஒரு 51 கோடி ரூபாயை சம்பாதித்து முதல் நான்குநாள் வசூலாக 100 கோடி ரூபாயை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தவிர பல வெளிநாடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்களில் ’பத்மாவத்’ வெளியாகியுள்ளது. அங்கும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வசூலில் இந்த படம் மிகப்பெரிய சாதனையை உருவாக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் கருதுகின்றன.

Leave A Reply

%d bloggers like this: