ஸ்ரீவில்லிபுத்தூர்;
ஆண்டாள் விவகாரத்தில், இனியும் பொறுமையாகப் போக மாட்டோம், நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம்; கல்லெறிவோம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை, கவிஞர் வைரமுத்து இழிவுபடுத்தி விட்டதாக கூறி, பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட சங்-பரிவாரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கலவர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சாமியார்களையும் அவர்கள் தூண்டி விட்டுள்ளனர்.அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர், சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்து, பின்னர் அதை ஒத்திவைத்தார். பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு வைரமுத்து நேரில் ஆண்டாள் கோயிலுக்கு வந்து மன்னிப்பு கேட்காவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்துவேன் என்றும் அறிவித்துள்ளார்.

வைரமுத்து தான் எழுதியதும் பேசியதும் என்ன? என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்த பிறகும், சங்-பரிவாரங்களும் சாமியார்களும் அதை ஏற்பதாக இல்லை.இதனிடையே, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வைரமுத்துவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பேசியுள்ளார்.அப்போது, வைரமுத்து ஸ்ரீவில்லிப்புதூர் வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கோரும் வரை போராட்டம் தொடரும் எனவும், சாமியார்களால் என்ன செய்து விட முடியும் என நினைப்பவர்களுக்கு, எதற்கும் தாங்கள் துணிந்தவர்கள் என்பதை காட்டுவோம் என்றும் கொக்கரித்துள்ள சடகோப ராமானுஜம், ‘இந்துக் கடவுள்களை மேடை போட்டு விமர்சித்தால் சோடா பாட்டில் வீசவும், கல்லெறியவும் அஞ்சமாட்டோம்’ என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

“சாமியார்கள் என்றால் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்” என்றும் “தொடா்ந்து இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை யாராவது பேசினால் “நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம், ‘மேடையை நோக்கி எங்களுக்கும் கல் எறியத் தெரியும்” என்று அவர் கூறியுள்ளார்.அத்துடன் குடியரசுத் தினத்தையும் அவமதிக்கும் வகையில் ஜீயர் பேசியுள்ளார். “என்ன குடியரசு தினம்? இங்கு குடிப்பதற்குத் தான் தினம் இருக்கிறது” என்றும் விமர்சித்துள்ளார்.இவ்வாறு ஆண்டாள் விவகாரத்தை முன்வைத்து சோடா பாட்டில் வீசுவோம்; கல்லெறிவோம் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வன்முறையை தூண்ட சங்-பரிவாரங்கள் திட்டமிட்டு முயற்சிகள் இறங்கியின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வன்முறையைத் தூண்டும் ஜீயர் ஆன்மிக தலைவரா, லோக்கல் ரவுடியா?
அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
சோடா பாட்டில் வீசவும் அஞ்சமாட்டோம், கல்லெறிவோம் என்று ஜீயர் சடகோப ராமானுஜர் பேசியிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.‘சோடா பாட்டில் வீசுவோம் என்று ஜீயர் பேசுவது பொறுப்புள்ள பேச்சு இல்லை. சோடா பாட்டில் வீசுவோம் என்று யார் கூறினாலும் அது கண்டனத்துக்குரியது. ஜீயரின் பேச்சு வன்முறையை தூண்டுவது போன்றே உள்ளது’ என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

“ஜீயர் ஆக வேண்டும் என்றால் அதற்கு ஒரு பயிற்சி உள்ளது என்பது இன்றுதான் தெரிகிறது. ஜீயர் ஆவதற்கு ஜாதி உள்ளிட்ட சில அடிப்படை தகுதிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சோடா பாட்டில், கல்லெறிய தெரிந்தால்தான் ஜீயர் ஆக முடியும் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது” என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

“ஜீயரின் ஒவ்வொரு பேச்சுக்கும் ஆயிரம்‌ அர்த்தங்கள் ‌உண்டு” என்று கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி. திராவிட இயக்கங்கள் மதயானைகளை அடக்கியே பழக்கப்பட்டவர்கள். கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்று அண்ணா கூறியுள்ளார். அதனால், சோடா பாட்டில், கல் எடுத்தாலும் அண்ணா வழியில் அதனை சந்திப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“எங்களுக்கும் கல் எறியத் தெரியும், சோடா பாட்டில் வீசத் தெரியும் என ரவுடி போல ஜீயர் பேசக்கூடாது என்றும், ஒரு ஆன்மீகவாதி போல் நடந்து கொள்ள வேண்டும்” என்று ஜீயர் சடகோப ராமானுஜருக்கு ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் கண்டணம் தெரிவித்துள்ளார்.

பொன்னாரின் புதிய விளக்கம்
இதனிடையே. ஜீயரின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் புதிய விளக்கத்தை அளித்துள்ளார். சோடா பாட்டில் வீசுவோம் என்பது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு “நல்ல அர்த்தத்தில் ஜீயர் பேசியிருப்பார்.ஆன்மீகப் பெரியோர்கள் அப்படியெல்லாம் பேசமாட்டார்கள். அவர்களுக்கு பாட்டிலெல்லாம் வீசத்தெரியாது. அருந்திவிட்டு காலியானால் தூக்கி வீசுவது பற்றி பேசியிருப்பார்” என்று உளறித் தள்ளியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: