சிதம்பரம்,
சுவாமி சகஜாநந்தா பெயரில் அரசு விருதுகளை வழங்கி கல்வியாளர்களை சிறப்பிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ஏழை எளிய மக்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கடந்த 1917 ஆம் ஆண்டு ஓமக்குளம் என்ற இடத்தில் 25 மாணவர்களைக் கொண்டு நாயன்மார்களின் ஒருவரான நந்தனார் பெயரில் தொடக்கப்பள்ளியை சுவாமி சகஜாநந்தா தொடங்கினார். இப்போது அப்பள்ளி ஆண்கள்,பெண்கள் என தனி தனியாக மேல்நிலைப்பள்ளி வரை உயர்ந்துள்ளது. சகஜாநந்தா பெயரில் தொழிற்கல்வி கூடமும் செயல்படுகிறது. நந்தனார் பள்ளி மற்றும் தொழிற்கல்விக்கூடம் அரசின் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. சகஜாநந்தாவின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஜன. 27ம் தேதி பள்ளிகளில் சிறிய அளவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் பள்ளியை தொடங்கி நூறு ஆண்டுகள் கடந்த நிலையில் பள்ளியில் படித்த மாணவர்கள், பள்ளி மீது பற்றுக்கொண்டவர்கள் அவரது பிறந்த நாளையும், நந்தனார் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவையும் சிறப்பாக நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிதம்பரம் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
நந்தனார் பள்ளியில் படித்த மாணவர்கள் உலக முழுவதும் பரவி இருக்கிறார்கள். அவரின் கல்வியின் சிறப்புகளை அறிந்து நான் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் இவர் சமூகத்திற்கு,கல்விக்கும் ஆற்றிய பணிகளை நேரில் எடுத்துக்கூறியும், சட்டமன்றத்தில் பேசியும் அவர் வாழ்ந்த இடத்திலே மணிமண்டபம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதனை ஏற்ற அவர் 1.25 கோடியில் மணிமண்டபம் கட்டுவதற்கு ஆணை வழங்கினார். தற்போது மணிமண்டப பணிகள் முடிந்து திறக்கும் நிலையில் உள்ளது.

அரசு நந்தனார் பள்ளிகளின் வெள்ளி மற்றும் பொன்விழாக்களை கொண்டாடியது போல் நூற்றாண்டு விழாக்களையும் கொண்டாட வேண்டும். அதே விழாவில் மணிமண்டபத்தையும் திறக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் அரசு பாரதியார், பெரியார் உள்ளிட்ட தலைவர்களுக்கு விருதுகள் வழங்கியது போல் கல்வியாளர்களுக்கு சகஜாநந்தா பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். அரசு இந்த நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளியில் நவீன கட்டமைப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். பள்ளி மாணவர்கள் பள்ளிப்படிப்பை தாண்டி நூலகம். நீட், சிவில் சர்வீஸ்,டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் மாணவர்கள் கவனம் செலுத்தி வெற்றிபெறுவதற்காகத் தனி கட்டமைப்பைப் பள்ளியில் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பள்ளியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தைப் பார்வையிட்டு அங்கு நடைபெற்றுவரும் பணிகள் குறித்து பாலகிருஷ்ணன் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் சகஜாநந்தா மணிமண்டப ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் பாலையா, பன்னீர்செல்வம், மணிவே, சிபிஎம் மாவட்டசெயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு கற்பனைச்செல்வம், நகரச் செயலாளர் பாரதிமோகன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி சகஜாநந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Leave A Reply