சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், இந்திரா நகர், சூரப்பட்பேடு, பத்மாவதிநகர் உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் கழிவுநீர், குடிநீர் இணைப்புக்குழாய் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள் முறையாக இல்லாததால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 24, 25,26,32 ஆகிய வட்டங்களில் சுகாதாரம் சீர்குலைந்துள்ளது குறித்து மாநகராட்சி நிர்வாகம் கவலைபட்டதாக தெரியவில்லை.

மழைக்காலங்களில் மழைநீர் கழிவுநீரோடு கலந்து பொதுசுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கிறது. சிறிய தெருக்களில் ஓடும் சாக்கடை நீர் குடிநீரோடு கலக்கிறது. குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. மேலும் இதில் உருவாகியுள்ள கொசுக்களால் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இம்மக்களின் உயிரோடு விளையாடும் போக்கை மாநகராட்சி நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று சமூக ஆர்வலர் வி.சரவணன் கூறினார்.

அம்பத்தூர் – செங்குன்றம் நெடுஞ்சாலையில் சூரப்பட்டு பகுதி அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து இந்திரா நகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெரு, திருவள்ளுவர் சாலை, வெங்கடசாய் நகர், டீச்சர்காலனி, சூரப்பட்டுபிரதானசாலை உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு செல்லும் வழியில், கழிவுநீர் செல்வதற்காக தற்காலிக கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இதில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், அதைபெரும் சிரமத்துடன் கடந்து செல்லவேண்டியுள்ளதாக பாதசாரிகள் கூறினர்.

கால்வாய் அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக மெதுவாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டால் முறையான பதில் இல்லை. சூரப்பட்டில் உள்ள மழைநீர் வடி கால்வாயில் கோரை புற்களும் கழிவுகளும் தேங்கி புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரிதுள்ளது. இங்குள்ள கடப்பா சாலையை கடந்து செல்லமுடியாத அளவிற்கு மிக மோசமாக உள்ளது. இந்த குறைபாடுகளை போக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.தாமோதரன் கூறினார்.

மக்கள் பிரச்சனைகளை போக்கக்கோரி மாதவரம் மண்டல அலுவலகத்திலும் அதிகாரிகளை நேரில் சந்தித்தும் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மற்றும் சமூகநல அமைப்புகள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சியோடு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி இணைக்கப்பட்டாலும் பாதாளசாக்கடை திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

குடிநீர் குழாய் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால் முதியோர் , குழந்தைகள் தெருக்களில் நடக்க சிரமப்படுகின்றனர். புதிய மற்றும் பழைய லட்சுமிபுரத்தில் மக்களுக்கு பட்டா கிடைக்காத நிலை உள்ளது.

ஆகவே இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24வது வட்டக்கிளைகள் சார்பில் ஞாயிறன்று (ஜன.28) காலை நடைபயணம் நடைபெறவுள்ளது. இந்திரா நகர், வாட்டர் டேங்க் அருகில் துவங்கும் இந்த பயணத்தின் போது பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிந்து அதனை தொகுத்து மாநகராட்சி அதிகாரிகளிடம் அளிக்கவுள்ளதாக சிபிஎம் மாதவரம்-செங்குன்றம் பகுதிக்குழு செயலாளர் வி.கமலநாதன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.