புதுதில்லி;
காகித இறக்குமதிக்கான சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ. 80 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, இறக்குமதிக்கான வரியை மீண்டும் விதிக்க வேண்டும் எனவும் வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது.
‘இந்தியாவில் காகிதம் மற்றும் காகித அட்டைகளுக்கான தேவை ஆண்டுக்கு 1.44 கோடி டன்னாக இருக்கிறது. இது சர்வதேச அளவில் 3.6 சதவிகிதமாகும். 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காகிதங்களுக்கான தேவை 7 சதவிகித உயர்வுடன் 2 கோடி டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ஆம் ஆண்டின் அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் காகித இறக்குமதி அளவு 60 சதவிகிதம் அதிகரித்து 10.5 லட்சம் டன்னாக இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தெற்காசிய நாடுகளிலிருந்து காகிதம் மற்றும் காகித அட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதற்கு வரி ஏதும் விதிக்கப்படாமல் இருப்பதால் அரசுக்கு ரூ.80 கோடி வரையில் இழப்பு ஏற்படுவதாக அசோசெம் கூறுகிறது. எனவே உள்நாட்டைச் சேர்ந்த காகித உற்பத்தி ஆலைகள் மற்றும் காகித உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காகித இறக்குமதிக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: