திருப்பூர், ஜன. 25 –
அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மற்றும் உடுமலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்,

திருப்பூர் குமரன் சிலை முன்பாக வியாழக்கிழமை சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எம்எல்எப் ஆகிய தொழிற்சங்கத்தினர் பெருந்திரளாக கூடினர். அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம், முறை சாரா தொழிலாளர்களுக்கு சட்ட சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியை கைவிடுவது, பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியபடி தொழிற்சங்கத்தினர் ரயில் நிலையம் அடுத்துள்ள தலைமை தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். எனினும் சுமார் 50 அடிகள் முன்பாக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். எனவே அந்த இடத்தில் தொழிற்சங்கத்தினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.அங்கு இம்மறியல் போராட்டத்துக்குத் தலைமை ஏற்று சிஐடியு மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் திருச்செல்வன் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதில் சிஐடியு மாவட்டத்த்தலைவர் கே.ரங்கராஜ், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், கட்டுமான தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார்,
ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சி.பழனிசாமி, பனியன் சங்கச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் பனியன் சங்கத் தலைவர் ஜி.பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் க.ராமகிருஷ்ணன், ஐஎன்டியுசி செயலாளர் ஏ.சிவசாமி, எச்எம்எஸ் செயலாளர் முத்துசாமி, எம்எல்எப் நிர்வாகி மு.சம்பத் மற்றும் சுமார் 30 பெண்கள் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.

உடுமலை
உடுமலை பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெகதீசன் தலைமை வகித்தார். இதில் ஏஐடியுசி சங்கத்தின் வி.சௌந்தரராஜன், எல்பிஎப் ஜெயராஜ், எம்எல்எப் ஈஸ்வரன், ஐஎன்டியுசி சங்கத்தின் சார்பில் காதர் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.