புதுச்சத்திரம், ஜன.25-
புதுச்சத்திரம் பகுதியில் சட்ட விரோதமாக ஓடையில் மணல் அள்ளும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் புதன்சந்தையை அடுத்துள்ள அகரம் பகுதியில் தத்தாதிரிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ஏளுர் ஏரிக்கு செல்லும் ஒடையில் கடந்த சில மாதங்களாக அதிகளவில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பகல் வேளையில் ஓடையில் குழி தோண்டி மணலை குவித்து வைத்துவிட்டு நள்ளிரவில் லாரியில் மணலை கடத்தி செல்கின்றனர். இவ்வாறு மணல் அள்ளும் கும்பல் சுமார் 10 அடிக்கும் மேல் ஒடையில் குழி பறித்து விட்டு மணலை அள்ளி செல்வதால் ஒடை முழுவதும் ஆங்காங்கே பெரியகுழிகள் காணப்படுகிறது. இதன்காரணமாக மழை காலங்களில் ஒடையில் தண்ணீர் வரும் பொழுது பெரும் குழிகளில் தண்ணீர் தேங்கி ஏரிக்கு வரும் தண்ணீர் தடைபடுவதுடன், ஓடையைகடப்பவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், இத்தகைய மணல்கடத்தும் கும்பல் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு தெரிந்தபோதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஆகவே, இவ்வாறு சட்ட விரோதமாக மணல் அள்ளும் சமுக விரோதிகள் மற்றும் அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.