கோவை, ஜன. 25-
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.தமிழக அரசு பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக வியாழனன்று கோவை காந்திபுரம் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் பேருந்து கட்டண உயர்விற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்துமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களை தாக்கி, தரதரவென இழத்துச் சென்று குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதன்பின் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் சூலூர் கோகுல், சிங்கை கோகுல், கிஷோர்,சஞ்சய், மணிகண்டன் ஆகிய 6 பேரை மட்டும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தினர்.இதையடுத்து நீதிபதியின் உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ளகரட்டடிபாளையத்தில் செயல்படும் கோபி கலை அறிவியல் கல்லூரிமாணவ, மாணவிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேருந்து கட்டண உயர்விற்கு எதிராக மூன்றாம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், சென்னிமலை சாலையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் அவ்வழியே வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:
சேலம் அரசு கலைக் கல்லூரிமாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கவின், மோகன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.