திருப்பூர், ஜன. 25 –
ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட சாவாறை பாறைக்குழி எனும் இடத்தில் பேருராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுக் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொது மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் மற்றும் ஊத்துக்குளி டவுன் அரசங்காடு கிணத்தாங்காடு பகுதி பொது மக்கள் புதன்கிழமை பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊத்துக்குளி கிராமம் ரி/ச/238 சாவாறை என்றழைக்கப்படும் பாறைக்குழியில் கடந்த இரு தினங்களாக பேரூராட்சி வாகனம் மூலம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த பாறைக்குழி சுகாதாரமாகவும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் வகையில் மழைநீர் சேமிப்பு அமைப்பாகவும் உள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயக் கிணறுகள் நிலத்தடி நீர் செறிவு பெருகின்றன. இந்நிலையில் பேரூராட்சியில் சேகரமாகும் நூற்றுக்கணக்கான டன் குப்பைகளை இங்கு கொட்டினால் அக்கம் பக்கம் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்படையும். அதோடு அங்கு கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும்வாய்ப்பும் உள்ளது. மேலும் அருகாமையில் உள்ள கிணறுகள், விவசாய நீர்நிலைகளும் மாசுபடும். அருகில் உள்ள கருப்பராயன் கோவில் வழிபாட்டுக்கு வரும் மக்களுக்கும் இடையூறாக இருக்கும்.

எனவே நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் குடியிருப்பும், விவசாயமும் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டும். ஏற்கெனவே அருகாமையில் இருக்கும் வாரிக்குளம் குட்டையில் குப்பை மற்றும் மாமிசக் கழிவுகளைக் கொட்டி நிரப்பியதால் மக்கள் ரோட்டில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன்மூலம் இப்பகுதி மக்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் இதே பகுதியில் குப்பை கொட்ட முயல்வது சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும். எனவே இந்த இடத்தில் குப்பை கொட்டுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். மீண்டும் குப்பை கொட்டுவது தொடர்ந்தால் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும். அத்துடன் புதனன்று பேரூராட்சி வாகனத்தில் குப்பை கொட்ட வந்த ஊழியர் பூபதி என்பவர் மக்களை தகாத வார்த்தைகளால் பேசி அவமதித்துள்ளார். எனவே அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.