திருப்பூர், ஜன. 25 –
திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.834 கோடியில் புதிய குடிநீர் திட்டப் பணி விரைவில் தொடங்க உள்ளது.

திருப்பூர் மாநகரில் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கலந்தாலோசனை செய்யும் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்திலும், தொட்டிபாளையம் இரண்டாவது மண்டல அலுவலகத்திலும் புதன்கிழமை நடைபெற்றது. மாநகரப் பொறியாளர் ஜி.ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செயற்பொறியாளர் எம்.வி.டி.தமிழ்ச்செல்வன் திட்டம் குறித்து கூறியதாவது: 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி திருப்பூர் மக்கள்தொகை 8 லட்சத்து 77 ஆயிரத்து 778 ஆகும். 2020ஆம் ஆண்டு உத்தேச மக்கள்தொகை 10 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. தற்போது மாநகரில் மூன்று குடிநீர் திட்டங்கள் மூலம் மொத்தம் 118 எம்எல்டி குடிநீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் புதுத்திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தில் கூடுதல் கட்டண அடிப்படையில் தற்காலிகமாக 50 எம்எல்டி குடிநீர் பெறுவதும் அடங்கும். போதிய குடிநீர் விநியோக உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் 3 முதல் 8 நாட்கள் இடைவெளியில் குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கூடுதல் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து குடிநீர் விநியோக கால அளவைக் குறைப்பதற்கும், புதிய நீரேற்று தலைமையிடம் அமைக்கவும், முக்கிய நீரேற்றுக் குழாய்கள் அமைக்கவும், 28 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கவும், குடிநீர் குழாய் அமைக்கவும் அம்ரூத் 2017 – 18 திட்டத்தில் ரூ.834 கோடியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அங்கு சுத்திகரிக்கப்படாத குடிநீரேற்றம் செய்ய 22.23 கிலோமீட்டர் நீளத்திற்கு பெரிய குழாய்கள் அமைக்கவும், 196 எம்எல்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், சுயநீரேற்ற குழாய்கள் கட்டவும், 5 லட்சம் லிட்டர் முதல் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 28 நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கவும், மாநகருக்குள் 850 கிலோமீட்டர் நீள விநியோகக் குழாய்கள் அமைக்கவும், 1 லட்சத்து 60 ஆயிரம் வீட்டுக் குடிநீர் குழாய்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இத்திட்ட கட்டுமானப்பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும். மாநகராட்சி மூலமே நேரடியாக கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் பணி நிறைவடைய கால அளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும்போது, மாநகரின் குடிநீர் விநியோக தேவை நிறைவடையும். 10 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் பயனடைவார்கள்.அத்துடன் தற்காலிகமாக புதுத்திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தில் கூடுதல் கட்டண அடிப்படையில் வாங்கப்படும் 50 எம்எல்டி குடிநீர் பெறுவதும் நிறுத்திக் கொள்ளப்படும். எனவே மாநகராட்சிக்கு இந்த செலவு மிச்சமாகும். இத்திட்டத்தை நிறைவேற்றும்போது ஒப்பந்தப்படி பயனர் கட்டணம் வசூலிக்கப்படும். எனினும் அது எவ்வளவு தொகை என்று பின்னர் நிர்ணயிக்கப்படும். இத்திட்டம் முழுமையடையும்போது அடுத்த 30 ஆண்டுகளுக்கான குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு செயற்பொறியாளர் எம்.வி.டி.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: