===ச.தமிழ்ச்செல்வன்===
எல்லோருக்கும் சொந்தமான தமிழ்க்கவி ஆண்டாளை ஒரு மதத்தின் சொத்தாக மாற்றி சங் பரிவாரம் அரசியல் நாடகம் நடத்திவரும் வேளையில் தமிழ்த்தாயை அவமதித்து சங்கரமடம் ஒரு பண்பாட்டுப்போரைத் தமிழர்கள் மீது ஏவியிருக்கும் சூழலில் “மொழிப்பிரச்னை ஜனநாயக வளர்ச்சியின் பிரிக்க முடியாத பகுதி” எனக் காலம் காலமாக வலியுறுத்திவரும் இடது சிந்தனைகளின் கூட்டு முழக்கம் ஜனவரி 27 ஆம் நாள் மாலை 5 மணிக்கு மதுரையில் ஓங்கி ஒலிக்க இருக்கிறது.

மொழிவழி தேசிய இனங்களின் கூட்டமைப்பான இந்தியாவின் அடித்தளமே அதன் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதிலும் வளர்த்தெடுப்பதிலும்தான் இருக்கிறது.அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளின் சமத்துவத்துவத்துக்கும் அவை ஒவ்வொன்றின் காலத்துக்கேற்ற வளர்ச்சிக்கும் அக்கறையுடன் முயற்சி எடுத்திருக்க வேண்டும்.ஆனால் இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் இத்தகைய முயற்சியை எடுக்கவில்லை.

”ஒரு பிராந்தியம் தன்னைத் தானே பயிற்றுவித்துக்கொள்வதற்கும் ,தனது சொந்த மொழியின் மூலம் தனது அன்றாட வேலைகளைச் செய்து கொள்வதற்கும் ஒரு மொழி வாரி மாநிலம் அவசியமாக இருக்க வேண்டும்.கலாச்சாரத்தின் பல்வேறு சிரப்புத்தன்மைகளுடனும் இலக்கிய அம்சங்களுடனும் இணைந்து செல்வது மொழியாகும்.மொழிவாரி மாநிலங்களில் இந்த அனைத்து அம்சங்களும் அந்தப் பிராந்தியத்தின் பொதுவான வளர்ச்சியில் உதவிகரமாக இருக்கும்படி பார்க்க்க வேண்டும்” என மொழிவாரி மாநில சீரமைப்புக்குழுவிடம் அன்று கம்யூனிஸ்ட்டுகள் குரல் எழுப்பினர்.

”இந்திய மொழிகளிற் சில ,இந்தியைக்காட்டிலும் மிகுந்த பொருட்செறிவும் ,சிறந்த இலக்கியங்களும் கொண்டவை என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்” என்று கூறிய நேருவும் இந்தி மொழி வளர்ச்சிக்கு அளித்த முக்கியத்துவத்தை பிற மொழிகளுக்குத் தரவில்லை.மாநிலங்களிலும் பிரதேச மொழிகள் வளர்ச்சியடையவில்லை.”இந்தியின் வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்தும் அதே வேளையில் நமது தேசிய மொழிகளின் வளர்ச்சி வேகத்தையும் அதிகப்படுத்த வேண்டும்.இதை ஒரே சமயத்தில் இணைத்துச் செய்ய வேண்டும்.ஒரு நிரந்தரமான சமநிலை மொழிவளர்ச்சியில் எட்டப்படும்வரை ஆங்கிலம் இருந்தாக வேண்டும்” என்று கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஹிரேன் முகர்ஜி நாடாளுமன்றத்தில் பேசினார் (லோக் சபா விவாதங்கள் பக்கம்-11413)
ஆனால் இக்குரல் செவிமடுக்கப்படவில்லை.

இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசாத மக்களே பெரும்பான்மையினராவர்.ஆனாலும் மத்திய அரசின் அலுவல் மொழியாக (தேசிய மொழியாக அல்ல) இந்தியை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதுமுதல் ,இந்தி மொழி வளர்ச்சிக்காக கோடான கோடி ரூபாய்களைச் செலவழித்தும் வருகிறது.அதன் வளர்ச்சியைக் கண்காணிக்க ஒரு நாடாளுமன்றக்குழுவையும் நியமித்தது.அக்குழு அவ்வப்போது குடியரசுத்தலைவருக்கு அறிக்கைகளையும் பரிந்துரைகளையும் அளித்து வரும்.எப்போதும் அவ்வறிக்கைகள் மீது நடவடிக்கை ஏதும் பெரிதாக எடுப்பதில்லை.

ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு ,இந்தியை முன்னுக்கு வைத்துப் பின்னால் சமஸ்கிருதத்தை சத்தமில்லாமல் திணிக்கும் அரசியலை திட்டமிட்ட முறையில் செய்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக குடியரசுத்தலைவருக்கு இந்நாடாளுமன்றக்குழு அளித்த 117 பரிந்துரைகளையும் ஏற்று நாடு முழுவதும் எல்லா மாநிலங்களின் மீதும் இந்தியைத்திணிக்க வகை செய்யும் ஆணையைக் குடியரசுத்தலைவர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி பிறப்பித்தார்.இந்திபேசாத மாநிலங்களில் இவ்வாணைக்கு எதிரான குரல்கள் எழுந்து வருகின்றன.

27ஆம் தேதி மதுரையில் கூடும் மாநாடு இந்தித்திணிப்புக்கு எதிராக வலுவாக முழங்க இருக்கிறது.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தனித்துவமான நாகரிகத்தைக் கொண்டிருந்தவர்கள் தமிழர்கள் என்பதை சங்க  இலக்கியம் எடுத்துரைத்தது. ஆனாலும் அது இலக்கியம் தானே, உண்மை எவ்வளவோ, கற்பனை எவ்வளவோ என்று சந்தேகம் கிளப்பியவர்கள் உண்டு. அதைப் போக்கியது கீழடி அகழாய்வு. அன்றே ஒரு நகர நாகரீகம் வைகைநதிக்கரையில் இருந்தது மெய்பிக்கப்பட்டுள்ளது. அதில் கண்டெடுக்கப்பட்ட பலநூறு பொருட்கள் சங்க இலக்கிய வாழ்வை மெய்ப்பிக்கும்  சான்றுகள். அவற்றின் காலமும் அறிவியல் பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஓர் இன மக்களின் தொன்மையைப்
பறைசாற்றும் இப்படியொரு வரலாற்று ஆதாரம் கிடைத்தால் எந்த ஒரு அரசும் பெருமையோடு அதனைப் பாதுகாக்கவும் அடுத்தக்கட்ட ஆய்வினை முன்னெடுக்கவும் முயலும். ஆனால் மோடிதலைமையிலான மத்திய அரசோ அவற்றை தடம் தெரியாமல் அழிக்கும் பணியில் ஈடுபட்டது.

இக்கொடுஞ் செயலுக்கு எதிராக தமுஎகசவும் , இன்னும் பிற அமைப்புகளும், ஊடகங்களும், தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாலும், நீதிமன்றத் தலையீட்டாலும் சிலமுன்னேற்றங்கள் தற்காலிகமாக ஏற்பட்டன. ஆனால் கீழடி ஆய்வினை முழுமையாக முடிக்கப் பல பத்தாண்டுகள் ஆகலாம். அதுவரைஆய்வுப்பணியை தொடர உரிய ஆணையும். தேவையான  நிதியும் வழங்கிட மத்திய அரசு மறுத்து விட்டது.குழிகள் மூடப்பட்டு விட்டன.ஆய்வுக்குழு திரும்பி விட்டது.

மாநில அரசு இந்த ஆய்வை நாங்கள் இனிச் செய்வோம் என சப்பை கட்டுகிறது.கீழடி போன்ற தொன்மைமிக்க நாகரிகத்தின் எச்சங்களை அகழ்ந்தாய்வு செய்கிற திறன்மிக்க வல்லுநர் குழு தமிழக தொல்லியல் துறையைல் இல்லாத சூழலில் ஏற்கனவே அங்கு அகழாய்வு செய்த மத்திய அரசின் தொல்லியல் துறையே ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்

கீழடியில் அடையாளம் காணப்பட்டுள்ள தொல்லியல் மேடு உள்ள 110 ஏக்கர். தனி நபர்களுக்கு உரிமையான இந்நிலத்தை உரிய இழப்பீடு அளித்து அரசு தன்னகப்படுத்த வேண்டும் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் தொல்லியல் சான்றுகள் சேதமாகும் வாய்ப்புள்ளதை அரசுகள் உணர வேண்டும்.

ஆனால் இதைக்கண்டுகொள்ள அரசுகளுக்கு நேரமில்லை.
ஆகவே 27ஆம் தேதி தமுஎகச,இந்திய மாணவர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.இந்திய தொழிற்சங்க மையம் ஆகிய நான்கு இயக்கங்களும் ஒன்றிணைந்து தமிழகத்தின் மனச்சாட்சியாக நின்று போர்ப்பிரகடனம் செய்ய இருக்கிறார்கள்.

தமிழக உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் ஏ.சௌந்திரராஜன், ”தமிழுக்குச் சிவப்பென்றும் பேர் ” என்று இந்துப்பத்திரிகையில் கட்டுரை எழுதிய அகில இந்திய மொழி உரிமைக்கூட்டமைப்பின் தலைவர் ஆழி செந்தில்நாதன் கீழடியின் மீது உலகத்தின் கவனத்தை ஈர்த்த எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர்.தமிழக சட்டமன்றத்தில் முதன் முதல் தமிழில் பேசியவரும் தியாகி சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதப்பந்தலில் உடனிருந்தவரும் மொழிவாரி மாநிலப்போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்றவருமான விடுதலைப்போராட்ட வீர்ர் செங்கொடி இயக்கத்தின் தியாகத்தலைவர் தோழர் என்.சங்கரய்யா நிறைவுரை ஆற்ற இருக்கிறார்.

ஓவியர் ஸ்ரீரசாவின் கைவண்ணத்தில் உருவான இந்தித்திணிப்பு எதிர்ப்புக் கண்காட்சியும் கீழடி அகழாய்வுக்கண்காட்சியும் திறக்கப்பட உள்ளன.கரிசல் கருணாநிதியின் இசை நிகழ்வும் வன்னிவேலம்பட்டி தப்பாட்டமும் மேடையேற இருக்கின்றன.கணியன் பூங்குன்றன் ,பரிதிமாற்கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் நினைவாகவும் கம்பம் கூடலூரில் இருந்து மொழிப்போர் தியாகிகள் நினைவாகவும் மொழிச்சுடர்களும் இராம நாதபுரம் மாவட்டம் அழகன்குளம் ,திண்டுக்கல் மாவட்டம் பாடியூர்,ஆய்க்குடியிலிருந்தும் கீழடியிலிருந்தும் பிடிமண்ணும் மேடைக்குக் கொண்டுவரப்பட இருக்கின்றன.

நம் பண்பாட்டு வேர்களைத் தொட்டுநின்று மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசான இந்தியாவின் இறையாண்மையை சாதி மத சக்திகளிடமிருந்து மீட்டெடுக்கச் சபதமேற்க மாமதுரை அழைக்கிறது வாரீர் தோழர்களே!

 

Leave a Reply

You must be logged in to post a comment.