திருப்பூர், ஜன.25 –
திருப்பூர் மாநகரில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூரில் பல்வேறு நாட்டினர் வர்த்தக விசயமாக வந்து செல்வது வாடிக்கை. குறிப்பாக நைஜீரிய நாட்டினர் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூருக்கு வந்து பின்னலாடை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியினர் இங்கேயே தங்கி நேரடியாக பனியன் ஆடை உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தொழில், வர்த்தகத்தில் ஈடுபட அனுமதியுடன் விசா பெற்றவர்கள் தவிர ஒரு பகுதியினர் கல்விக்கான விசா பெற்றும், சிலர் முறையான ஆவணங்கள் ஏதுமின்றியும் இங்கே தங்கி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைஜீரியர்கள் அமைப்பு சார்பில் திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் பொது அறிவிப்பு ஒன்று பின்னலாடை வர்த்தக கடைகளின் கதவுகளிலும் ஒட்டப்பட்டிருந்தன. இதில் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக தங்கி இருப்போர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த பின்னணியில் புதன்கிழமை திருப்பூரில் வடக்கு காவல் ஆய்வாளர் பிச்சையா, தெற்கு ஆய்வாளர் தென்னரசு, சென்ட்ரல் காவல் ஆய்வாளர் நெல்சன் உள்ளிட்ட காவல் துறையினர் வெளிநாட்டினரிடம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பின்னலாடை தொழிலில் ஈடுபட்டிருந்த நைஜீரியர்கள் சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். இதில் ஒகிதி மைக்கேல் (28), பியாடி என்னெவ் அவே (39), சன்டேமேத்யூ (38), கெனட் ஒடிடிகா (41) ஆகியோர் போலி விசாவில் இங்கு தங்கியிருந்தது தெரியவந்தது. மேலும், ஒகமோ சின்னோ பாலினே (25) மற்றும் பாலினே அபுஜி (38) ஆகியோரிடம் எவ்வித  ஆவணங்களும் இல்லாத நிலையில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் முறைகேடாக தங்கியிருந்த வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் வழக்கு பதிந்து ஆறு பேரையும் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.