கோவை, ஜன. 24-
பேருந்து கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி புதனன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் தாக்கி கைது செய்தனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக புதனன்று கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்திய மாணவர் சங்கம் மற்றும் முற்போக்கு மாணவர் அமைப்புகளின் தலைமையில் கல்லூரி முன்பாக உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயன்றனர். ஆனால், பேருந்து கட்டணத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் நீடிக்கும் எனக்கூறி மாணவர்கள் அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஆண்டகளுர் கேட்டில் உள்ள அரசு திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் புதனன்று இரண்டாக நாளாக வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூவரசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பேருந்து கட்டண உயர்விற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் செயல்படும் கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து போராட்ட இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் வரை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என உறுதிபட தெரிவித்தனர்.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், உடுமலையிலுள்ள அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு, பேருந்து கட்டண உயர்விற்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: