திருப்பூர், ஜன.24 –
திருப்பூர் மாநகரில் 17 வார்டுகளில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை ரூ.250 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சியில் புதன்கிழமை மக்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் செயற்பொறியாளர் எம்.வி.டி.தமிழ்ச்செல்வன் விளக்கியதாவது: திருப்பூர் மாநகரில் ஏற்கெனவே பழைய மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நடைமுறையில் உள்ளது. விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை இதுவரை இல்லை. எனவே தற்போது 12 (பகுதி), 13, 14 (பகுதி), 22 (பகுதி), 23 (பகுதி), 24 (பகுதி), 27 (பகுதி), 32 (பகுதி), 43 (பகுதி), 46, 49 (பகுதி), 50, 51, 56, 58, 59 மற்றும் 60 ஆகிய 17 வார்டுகளில் தற்போது பாதாளச் சாக்கடைத் திட்டம் அம்ருத் 2017 – 18 திட்டத்தின்கீழ் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மத்திய அரசின் மானியப் பங்குத் தொகை 50 சதவிகிதம் என்ற அடிப்படையில் ரூ.125 கோடியும், மாநில அரசு மானியம் 20 சதவிகிதம் என்ற அடிப்படையில் ரூ.50 கோடியும் வழங்கப்படும். மீதமுள்ள 30 சதவிகித பங்குத் தொகையான ரூ.75 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் பெறப்படுகிறது. இந்த ரூ.75 கோடியில் 25 சதவிகிதம் அதாவது ரூ.18.75 கோடி நிதியுதவியாக வழங்கப்படுகிறது.

அதில் 75 சதவிகிதம் அதாவது 56.25 கோடி கடன் தொகை ஆகும். மேற்கண்ட 17 வார்டு பகுதிகளில் 2020ஆம் ஆண்டு மக்கள்தொகை உத்தேச மதிப்பீட்டின்படி 2 லட்சத்து 20 ஆயிரத்து 91 பேர் ஆகும். இப்பகுதிகளில் தினமும் 24.19 எம்எல்டி கழிவுநீர் வரும். இடைக்கால கழிவுநீர் அளவு 33.17 எம்எல்டியாகவும், உச்சகால கழிவுநீர் 43.93 எம்எல்டியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர நில அமைப்பின்படி 17 கழிவுநீர் சேகரிப்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேற்படி 17 வார்டுகளை உள்ளடக்கிய 7 மண்டலங்களில் கழிவுநீர் சேகரிப்புக்கு 200 மி.மீட்டர் முதல் 800 மி.மீட்டர் விட்டமுள்ள குழாய்கள் 274 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இதில் 10 ஆயிரத்து 882 ஆள் இறங்கு குழிகளும் (மேன்ஹோல்) அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 33 ஆயிரத்து 651 வீட்டு இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பெரிய சர்க்கார்பாளையத்தில் 15 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையமும், ஆண்டிபாளையத்தில் 19 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்படும்.

இத்திட்டப் பணியை 24 மாதங்களில் நிறைவேற்றி, 6 மாதங்கள் சோதனை ஓட்டம் செய்து, ஒப்பந்ததாரரின் பராமரிப்புக்கு 3 ஆண்டுகள் வழங்கப்படும். இத்திட்டம் நிறைவடைந்தால் 2 லட்சத்து 20 ஆயிரத்து 91 வீடுகள் பாதாளச் சாக்கடை வசதி பெற்று பயனடையும். இவ்வாறு தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.