தமிழை அவமதிப்பதையே மரபாக கொண்டிருக்கும் காஞ்சி சங்கரமடத்தின் விஜயேந்திரருக்கு தமுஎகச கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமுஎகசவின் மாநிலத்தலைவர் ச.தமிழ்செல்வன் மற்றும் பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

 

சென்னையில் ஜனவரி 23 அன்று நடைபெற்ற சமஸ்கிருத அகராதி வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்காமல் அமர்ந்தவாறே இருந்திருக்கிறார். மேடையிலும் அரங்கத்திலும் இருந்த எல்லோரும் எழுந்து நின்றபோதிலும் அவர் மட்டும் அமர்ந்தே இருந்திருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததன் மூலம் தமிழ் அவமதிக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் பொருள்.

இது செய்தியாக வெளிவந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ள பின்னணியில், சங்கர மடத்திலிருந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கராச்சாரிகள் எழுந்து நிற்பது மரபல்ல என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழை அவமதிப்பதை ஒரு மரபாகவே கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதை விடச் சான்று தேவையில்லை.

கடவுள் வாழ்த்து பாடப்படுகிறபோது அமர்ந்த நிலையில் தியானம் செய்வது வழக்கம், அப்படித்தான் தமிழ்த்தாய் வாழ்த்தின்போதும் நடந்திருக்கிறது என்றும் மடத்தின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. வருத்தம் தெரிவிக்கவோ இனி அவ்வாறு நடக்காது என்று கூறவோ முனவருவதற்கு மாறாக, தவறுக்குப் புனித முலாம் பூசி நழுவுகிற உத்தியாகத்தான் இந்தச் செயற்கையான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளலாம்.

சமஸ்கிருதம்தான் தேவ மொழி, தமிழ் நீச மொழி என்ற, தமிழைத் தாழ்வாகக் கருதுகிற பிராமணியக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவர் பொது மேடையில் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார் என்பது வெளிப்படை. கடவுள் வாழ்த்துக்கு இணையாக தமிழ்த்தாய் வாழ்த்தைக் கருதியது உண்மையானால், ஆலயங்களில் தமிழே இனி முதன்மையான வழிபாட்டு மொழியாக இருக்கும் என்று மடத்தின் சார்பில் அறிவிக்கப்படுமா? விஜயேந்திரர் செயலை நியாயப்படுத்துகிறவர்கள் இதை வலியுறுத்துவார்களா?

தமிழ் உணர்வாளர்கள் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தனது ஆணவச் செயலுக்காக அவர் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று தமுஎகச வலியுறுத்துகிறது. இனியும் மதபீட அதிகாரத்தின் பெயரால் இத்தகைய அவமதிப்புகள் நடவாது என்பதை மொழிகளின் சமத்துவத்தை மதித்திடும் அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமுஎகச வேண்டுகிறது இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.