திருப்பூர், ஜன. 24 –
செயற்கையாக விலையேற்றி தொழிலை அழிப்பதாக குற்றம்சாட்டி காங்கயத்தில் பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

கர்நாடக மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வர இருப்பதால், அங்குள்ள ஆளும் வர்க்கக் கட்சிகள் பட்டு நூல் சந்தையைத் தீர்மானிக்கும் மிகப்பெரும் வியாபாரிகளிடம், தேர்தல் நிதியாக மிகப்பெரும் பணத்தை நன்கொடையாக பெறு
கின்றனர். அதற்கேற்ப பட்டு நூல் விலையை உயர்த்தினாலும் கண்டு கொள்ளாமல் ஆட்சியாளர்கள் ஒப்புக் கொண்டதாகக் கூறி கடந்த சில மாதங்களாக பட்டுநூல் விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர். குறிப்பாக கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட பட்டு நூல் தற்போது ரூ.4 ஆயிரம் எனவும், சீன இறக்குமதி பட்டு ரூ.4 ஆயிரத்து 200 என இருந்தது ரூ. 5 ஆயிரம் எனவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இனிவரும் நாட்களிலும் அதிகரிக்கும் எனவும், உள்நாட்டு பட்டு ரூ.5 ஆயிரத்தையும், சீன இறக்குமதி பட்டு ரூ.6 ஆயிரத்தையும் எட்டும் என கூறப்படுகிறது.

அதேசமயம் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் பழைய விலையிலேயே கிலோ ரூ.500 என்ற அளவில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டுகளில் கடும் வறட்சி இருந்து, மல்பெரி சாகுபடி குறைந்தபோதும் பட்டு நூல் விலை உயரவில்லை. தற்போது நல்ல மழை பெய்து, மல்பெரி உற்பத்தி அதிகரித்திருக்கும் சூழலிலும், விவசாயிகளுக்கும் விலை கிடைக்காதபோதும், வியாபாரிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயற்கையான முறையில் விலையை உயர்த்தி வருவதாக பட்டுக் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி முதல் வரும் 30ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பட்டுக் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகளிடம் கொள்முதல் மற்றும் விற்பனையை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை பட்டுக்கைத்தறி நெசவாளர்கள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்பட பலர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இதில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: