கோவை,
9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே ராயர்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (36). இவர் மனைவி மற்றும் 9 வயது மகள் உடன் வசித்து வந்தார். இவருடைய மகள் காடுவெட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த 9வயது சிறுமியும், வெள்ளியங்கிரியின் மகளுடன் படித்து வந்தார். பள்ளிக்கு மகளை அழைத்து வந்து விடும்போது, வகுப்பு தோழியான 9 வயது சிறுமியும் மற்றும் அவரது பெற்றோரின் பழக்கம் வெள்ளியங்கிரிக்கு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 26.11.2015 அன்று, பெற்றோரிடம் அழைத்துச் செல்வதாக கூறி அச்சிறுமியை வெள்ளிங்கிரி இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர். வழியில் இருந்த சோளக்காட்டிற்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வெள்ளியங்கிரியை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை நீதிபதி அல்லி முன்னிலையில் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் வெள்ளியங்கிரி மீதான குற்றம் நிருப்பிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: