இராமநாதபுரம்;
அதானியின் சூரிய ஒளிமின் உற்பத்தி மையத்தில் சூரிய ஒளித்தகடுகளை உப்புத்தண்ணீரில் கழுவினால் தகடுகள் பாதிக்கும் என்பதால் சுத்தமான குடிநீரையே பயன்படுத்துகின்றனர்.தினமும் காலை மாலை இரு வேளையும் இந்த சுத்திகரிப்பிற்கென டிராக்டர், லாரிகளில் அதிகாலை முதல் காலை 10 மணிக்குள்ளும் மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 7 மணிக்குள்ளும் குடிநீரை உறிஞ்சி லாரிகளில் அள்ளிக்கொண்டு செல்கின்றனர். முழுக்க முழுக்க சுத்தமான குடிநீரையே கழுவுவதற்கு பயன்படுத்துகின்றனர். வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தின் நீராதரத்தை மேலும் காவு வாங்கும் வகையில் கமுதியில் உள்ள அதானி குழுமத்தின் சூரிய மின்சக்தி நிலையத்தில் தகடுகளை கழுவ தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் உறுஞ்சப்பட்டு வீனடிக்கபடுகிறது. 

இச்சம்பவம் தண்ணீருக்கு திண்டாடும் இப்பகுதி மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சாயல்குடி சாலையில் உள்ளது. அதானி குழுமத்தின் கவுதம் அதானிக்கு சொந்தமான 648 மெகா வாட் சூரிய மின்சக்தி நிலையம். உலகின் மிகப்பெரிய மின்நிலைய திட்டமான இதனை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணொளி காட்சி மூலமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கமுதி பகுதியில் செங்கப்படை, செந்தனேந்தல், தாதாகுளம், குண்டுகுளம், சொக்கலிங்கபுரம், ஒழுகுபுளி, புதுக்கோட்டை, தோப்படைப்பட்டி, ஊ.கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களை அழித்து ரூ.4 ஆயிரத்து 536 கோடிகள் மதிப்பீட்டில் இந்த மின்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலரிடம் அதிக விலை ஆசை காட்டியும் மிரட்டியும் விளைநிலங்கள் பறிக்கபட்டன. தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து அதானி குழுமம் மின் தயாரிப்பை துவங்கியது. இந்த நிறுவனத்தின் தேவைக்காக நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமாக லிட்டர் குடிநீர் பயன்படுத்தப்படுகிறது.இதனால் வறட்சியால் திண்டாடும் ராமநாதபுரம் மாவட்டம் தற்போது மேலும் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது. கமுதி சுற்று வட்டார பகுதிகளில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து 600 அடி ஆழத்திற்கும் கீழ் சென்றுவிட்டது. இந்த சூழுலில் அதானி நிறுவனத்திற்காக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறுஞ்சப்படுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அதானி சோலார் மின்தகடுகளை கழுவ குடிநீரை கொண்டு செல்வதற்கு தடைவிதித்தது. தற்போது கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அதானி நிர்வாகம் தனியார் சிலரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கமுதி, கோட்டைமேடு, பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்களில் மின்தகடுகளை சுத்தம் செய்ய சுத்தமான குடிநீரை எடுத்து பயன்படுத்துகிறது. இதனால் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கபட்டுள்ள விவசாயிகள் பொது மக்கள் தங்களது கிராமங்களை காலி செய்துவிட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தர நீர்நிலைகளோ ஆண்டு தோறும் நீர்வரும் ஆறுகளோ கிடையாது. 1694 கண்மாய்கள் உள்ள போதும் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது கிடைக்கும் மழையை சார்ந்தே குடிநீர் ஆதாரம் உள்ளது. விவசாயம் முழுவதும் பருவமழையை நம்பியே உள்ளது. ஏற்கனவே வறட்சி மாவட்டமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தற்போது கடும் வறட்சி தாண்டவமாடி வருகிறது. குடிநீருக்கு மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

உச்சகட்ட வறட்சியில் தட்டு தடுமாறி வரும் இம்மாவட்டத்தில் கமுதியில் இருக்கும் அதானி குழுமத்தின் சோலார் மின்நிலையத்தில் தடையின்றி குடிநீர் வீணடிக்கபட்டு வருவது இம் மாவட்ட மக்கள் அனைவரையும் பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு குடிநீர் தட்டுபாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமுதி பகுதியில் உள்ள பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் தலையிட சிபிஎம் வலியுறுத்தல்
அதானி குழுமம் மக்களின் குடிநீர் ஆதாரத்தை பயன்படுத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதானி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட நிறுவனம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளை தடுக்க மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.