திருப்பூர், ஜன. 23 –
திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா பத்மினி கார்டனில் வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்குகிறது.

இதுதொடர்பாக புத்தகத் திருவிழா வரவேற்புக் குழுத் தலைவர் யுனிவர்சல் எஸ்.ராஜகோபால், அறங்காவலர் அ.நிசார் அகமது ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாக, புத்தக வாசிப்பு பழக்கத்தின் அவசியத்தை உணர்த்தி, மக்களின் சமூக அக்கறையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் சேவை அடிப்படையில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி முதல் பிப்
ரவரி 4ஆம் தேதி முடிய 11 நாட்கள் காங்கயம் சாலை பத்மினி கார்டனில் இவ்விழா நடைபெறுகிறது.

141 அரங்குகள்:
இங்கு மொத்தம் 141 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பாரதி புத்தகாலயம், என்சிபிஎச், விடியல், எதிர், சாகித்யஅகாடமி, காலச்சுவடு, விஜயா பதிப்பகம், கிழக்கு, விகடன், அலைகள், சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், இஸ்லாமிய புத்தக நிலையம், ஈஷா பவுண்டேசன், புதிய தலைமுறை உள்பட தமிழகத்தின் முன்னணி நிறுவனங்கள் உள்பட 55 பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. இவற்றை உள்ளடக்கி, முன்னணி புத்தக விற்பனையாளர்கள் உள்பட மொத்தம் 94 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. சென்னை புத்தகத் திருவிழாவின் தொடர்ச்சியாக இந்த திருவிழா நடத்தப்படும் நிலையில், சென்னையில் வெளியிடப்பட்ட பல்வேறு புதிய புத்தகங்களும் உடனடியாக இங்கு விற்பனைக்கு வரும் என்பதால் புத்தக ஆர்வலர்களுக்கு விருந்தாக அமையும். ஒவ்வொரு நாளும் நான்கைந்து பள்ளிகளில் இருந்து மொத்தமாக மாணவர்களை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செல்லா பண விவகாரத்தால் நெருக்கடி ஏற்பட்டபோதும், 60 ஆயிரம் பார்வையாளர்கள் வந்தனர். ரூ.1.25 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையானது. இந்த ஆண்டு விரிவான முறையில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா நடைபெறும் 11 நாட்களும் வாகனங்கள் மூலம் திருப்பூர் வட்டாரம் முழுமையும் பிரச்சாரம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு ஜிஎஸ்டி பாதிப்பு இருந்தபோதும், 1 லட்சம் பார்வையாளர்களை வரவழைக்கவும், ரூ.ஒன்றரை கோடிக்கு புத்தகங்கள் விற்பனைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

100 பள்ளிகளுக்கு புத்தகங்கள்:
அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகித கழிவு வழங்கப்படும். ரூ.1000க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு நூல் ஆர்வலர் சான்றும் வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.5000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். இந்த ஆண்டு புதுமை முயற்சியாக, பள்ளியில் நூலகத்தை சிறப்பாக பயன்படுத்த முனைப்புடன் இருக்கும் நூறு பள்ளிகளைத் தேர்வு செய்து, அப்பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்படும். ஏற்கெனவே மாணவர் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்றோருக்கு இவ்விழாவின்போது பரிசுத் தொகை, சான்றிதழ், கேடயம் வழங்கப்படும். பங்கேற்ற 10 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

தொடக்க விழா:
இந்த புத்தகத் திருவிழாவை வியாழனன்று மாலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். அன்று விசாகப்பட்டினம் குச்சுப்புடி நடனக் கலைஞர் எஸ்.ஷைலஜாவின் நடன நிகழ்ச்சி நடைபெறும். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தக அரங்குகள் திறந்திருக்கும். இத்துடன் தினமும் காலை 11 மணிக்கு கல்வி அறிவியல் சார்ந்த நிகழ்வுகள், தொலைநோக்கி மூலம் வான்நோக்கு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. மாலை கருத்தரங்குகள், பட்டிமன்றம் உள்பட, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் ஒடிசா கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், நீதிபதி ஆர்.மகாதேவன், கம்பம் செல்வேந்திரன், டாக்டர் பெ.ஜீவானந்தம், ஊடகவியலாளர்கள் ப.திருமாவேலன், மு.குணசேகரன், கல்வித்துறை அதிகாரி வி.கார்மேகம், முன்னாள் எம்எல்ஏ அ.சவுந்தரராசன், மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, தமுஎகச துணைத் தலைவர் எஸ்.ஏ.பெருமாள், கலை இலக்கிய பெருமன்றம் இரா.காமராசு, சபரிமாலா, பொருளாதார ஆய்வாளர் க.சுவாமிநாதன், பேராசிரியர் முனைவர் க.பழனிதுரை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நிறைவாக நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

குறைந்த விலையில் தரமான உணவுப் பொருட்கள் கிடைக்கும் கேண்டீன் வசதி செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் கிடையாது. தாராளமான இடவசதி உள்ளது. பொதுக்கழிப்பிட வசதியும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது, வரவேற்புக்குழு நிர்வாகிகள் ஆர்.ஈஸ்வரன், எம்.ஜீவானந்தம், லிங்க்ஸ் சௌகத் அலி, யுனிவர்சல் பெரியப்பன், ஆர்.ஏ.ஜெயபால், வழக்கறிஞர் எஸ்.பொன்ராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: