பொள்ளாச்சி, ஜன.23-
பொள்ளாச்சி அருகே 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

பொள்ளாச்சி ஆழியார் அருகேயுள்ள அகதிகள் முகாம் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவியை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரியும் தர்மராஜ் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவரின் சித்திரவதையை தாங்க முடியாத அம்மாணவி திங்களன்று பள்ளி முடிந்ததும் அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் தலைமை ஆசிரியர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் எனக்கூறி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆழியார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தர்மராஜை கைது செய்த காவல்துறையினர், பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றம் ஜே.எம் 2ல் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பணிநீக்கம் செய்திடுக:
இந்நிலையில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் தர்மராஜை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கான எழுத்து ஆவணத்தை காண்பிக்க வேண்டும் எனக்கோரி செவ்வாயன்று அப்பகுதி மக்கள் மீண்டும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொள்ளாச்சி வட்டாட்சியர் செல்வபாண்டி, உதவி தொடக்க கல்வி அலுவலர் சின்னப்பராஜ் மற்றும் ஆழியார் காவல் துறை அதிகாரிகள் பொது
மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: