கோவை, ஜன.23-
தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் செவ்வாயன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு திடீரென அருகிலுள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தையும் மேற்கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ், செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டக்கல்லூரி மாணவர்கள்:
இதேபோல், கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசின் அநியாய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், ஆண்டுக்கு ஒரு முறையும் பேருந்து கட்டணத்தை உயர்த்திக் கொள்வோம் என்கிற அரசின் முடிவைக் கண்டித்தும் ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மௌ.குணசேகர், புரட்சிகர மாணவர் முன்னணியின் கண்மணி உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

கோபி:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் செயல்படும் கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்விற்கு கண்டனம் தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: