கோவை,
பேருந்து கட்டண உயர்வுக்கெதிரான பொதுமக்களிடையே பெறப்பட்ட வாக்கு சீட்டுகளை தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோருக்கு மாதர் சங்கத்தினர் அனுப்பி வைத்தனர். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென பல மடங்கு உயர்த்தியுள்ளதை கண்டித்து மாநிலம் முழுவதும் பல தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திங்களன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு இயக்கத்தை நடத்தினர்.

இதில் பதிவான வாக்குகளை செவ்வாயன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முன்னிலையில் மாதர் சங்கத்தினர் எண்ணிக்கையை நடத்தினர். இதில் அரசிற்கெதிராக இரண்டாயிரத்து 315 வாக்குகள் பதிவாகின. அதேநேரம், அரசிற்கு ஆதரவாக ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை. இதனையடுத்து அரசிற்கெதிரான அனைத்து வாக்கு சீட்டுகளையும் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருக்கு மாதர் சங்கத்தினர் அனுப்பி வைத்தனர். இந்த இயக்கத்தில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அமுதா, செயலாளர் ராதிகா, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி மற்றும் நிர்வாகிகள் சாந்தா, சாமூண்டீஸ்வரி, பிரியா, முத்தம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: