திருப்பூர், ஜன. 23 –
திருப்பூர் மருத்துவ மாணவர் சரத் பிரபு தில்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த பிரச்சனையில் நேர்மையான விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்ட வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர், பொது நல அமைப்புகள் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவித்தனர்.

திருப்பூர் மருத்துவ மாணவர் சரத் பிரபு கடந்த ஜன.17 ஆம் தேதி தில்லியில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்களும்,தழும்புகளும் இருந்தாலும் டில்லி காவல் துறையினர் தற்கொலை என்றே வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரவணன் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தில் சேர்ந்த சில வாரங்களிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் உயர் மருத்துவக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்த சூழலில் மர்மமான முறையில் இறந்திருப்பது, இங்கிருந்து திறமையான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதை அச்சுறுத்தக் கூடியதாக உள்ளது என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் மருத்துவர் சரத் பிரபுவின் மறைவுக்கு நேர்மையான முறையில் சிபிஐ விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகில் அனைத்துக் கட்சிகள்சார்பில் இரங்கல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் மேயர் க.செல்வராஜ் தலைமையில் எம்.ராஜகோபால் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), எம்.ரவி (இந்திய கம்யூனிஸ்ட்), சு.சிவபாலன் (மதிமுக), ஆர்.கிருஷ்ணன் (காங்கிரஸ்), எஸ்.ரவிக்குமார் (தமாகா), ஆறுமுகம் (தி.க.), முத்துக்குமார் (த.பெ.தி.க), ஆசிரியை சிவகாமி (அறிவியல் கழகம்), எம்பரர் வீ.பொன்னுசாமி (சைமா) உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.

இதையடுத்து சரத் பிரபு மரணம் கொலை என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதால் நியாயமான விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதையடுத்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினர், பல்வேறு தொழில் மற்றும் பொது நல அமைப்பினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சில நிமிடங்கள் உயர்த்திப் பிடித்து சரத் பிரபுவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உள்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.