நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல்போன்கள் பலவும் பாதுகாப்பு குறைபாடுகள் கொண்டதே என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட், விண்டோஸ் போன்களை விட ஆப்பிள் போன் பாதுகாப்பானது என்று சொல்லிவந்த நிலையில், அவையும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது.

பிராசசர்களில் கோளாறு
ஆப்பிள் நிறுவனம் தயாரித்த ஐஃபோன், ஐபேட் மற்றும் மேக் கணினிகளின் சிப்கள் அனைத்தும் ‘மெல்ட் டவுன்’ (Meltdown ) மற்றும் ‘ஸ்பெக்டர்’ (Spectre) ஆகிய கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனமே செய்தி வெளியிட்டுள்ளது.இந்தக் கோளாறுகளைப் பயன்படுத்தி இணைய ஹேக்கர்கள், மொபைல், டேப்ளட், ஐபேட் மற்றும் கணினிகளில் இருந்து டேட்டாக்களைத் திருடுவதற்கு வாய்ப்புள்ளதென்று கூறப்படுகிறது. இப்பிரச்சனையை சரி செய்ய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் முனைப்பு காட்டி வருகின்றன.

“அனைத்து மேக் கணிப்பொறிகள் மற்றும் ஐஃபோன்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எனினும், இந்தக் கோளாறுகளால் தரவுகள் எதுவும் திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்தக் கோளாறு அனைத்து நவீன பிராசசர்களுக்கும் பொருந்தும். எல்லாக் கணிப்பொறிகள் மற்றும் இயங்குதளங்களுக்கும் இது பொருந்தும். இப்பிரச்சனையை சமாளிப்பதற்கான, சில மென்பொருள் ‘அப்டேட்டுகளை’ வெளியிட்டுள்ளோம்” என்று ஆப்பிள் நிறுவனமே தன்நிலை விளக்கம் வெளியிட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு, விண்டோஸ் ஆகிய இயங்குதள போன்களைப் போல் அல்லாமல் தங்கள் கருவிகள் மிகவும் பாதுகாப்பானவை என்று மேக் பயன்பாட்டாளர்கள் நம்பி வந்தனர். இந்த நம்பிக்கைக்கு தற்போது பலத்த அடி விழுந்துள்ளது.உலகின் பெரும்பாலான கணினி மற்றும் மொபைல் போன்களுக்கு சிப்களைத் தயாரிக்கும் பணியை செய்துவரும் இன்டெல் மற்றும் ஏ.ஆர்.எம் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த சிப்களில் ‘மெல்ட் டவுன்’ மற்றும் ‘ஸ்பெக்டர்’ எனப்படும் இக்கோளாறுகள் கண்டறியப்பட்டன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தங்களின் எந்தெந்த தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களும் ஏற்கனவே கூறியுள்ளன.

உலகில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் சுமார் 80 விழுக்காடு சந்தையைப் பெற்றிருக்கும் ஆண்ட்ராய்ட் போன்களில், சமீபத்தில் வெளியான மென்பொருள் அப்டேட்களைப் பெற்றவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கூகுள் கூறியுள்ளது. தான் வழங்கும் பெரும்பாலான மென்பொருள் மற்றும் கணினி சேவைகளுக்கு, பாதுகாப்பு அம்சங்களை விண்டோஸ் இயங்குதளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.‘மெல்ட் டவுன்’ மற்றும் ‘ஸ்பெக்டர்’ குறித்த விவரங்கள் அறிந்த பின்னர், விவகாரம் வெளியில் தெரியும் முன்பே இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரையன் குசேனிக் தனது வசம் இருந்த அந்நிறுவனத்தின் 2,40,000 பங்குகளை கடந்த அக்டோபர் மாதம் மாதம் விற்றுவிட்டார்.

“இந்தக் கணிப்பொறிக் கோளாறுகளுக்கும், அவரது விற்பனைக்கும் தொடர்பில்லை,” என்று இன்டெல் கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: