36 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்ட் மொபைல்களை விளம்பரங்களுக்கு திசை திருப்பும் வகையிலான தீம்பொருள் ஒன்று கடந்த வருடம் கண்டறியப்பட்டது. ஜூடி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் போலியாக தீய ஆப்ஸ்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதென்றும். கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் 50 ஆப்ஸ்களில் இம்மென்பொருளுக்கு மடை மாற்றும் வகையில் விளம்பரங்களை வெளியிடும் நிரல்களின் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த ஆப்ஸ்களில் உள்ள குறியீடு (Code) பாதிக்கப்பட்ட போன்களில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை இலக்காகக் கொண்டு, அதற்கு பயன்படுத்துபவரை அழைத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டதாகும்.. ஆப்ஸ் பயன்படுத்தும்போது இடைமறித்துத் தோன்றும் விளம்பரங்களைக் கிளிக் செய்வதன் மூலம், அந்த இணையதளத்தை உருவாக்கியவர்களுக்கு மோசடி வழியில் பணம் கிடைக்க வழி உருவாக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதல் நிரல் கூகுளின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டிச் சென்று பல ஆப்ஸ்களில் நுழைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.. எனிஸ்டூடியோ என்ற நிறுவனம் வெளியிடும் வீடியோ கேம்களில் ஜூடி என்ற ஒரு கதாபாத்திரம் இடம்பெறுகிறது. சுமார் 18 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ள இந்த ஆண்ட்ராய்ட் விளையாட்டைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட 40 வகையான செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஆனால், பாதிப்புக்கு உள்ளான ஆப்ஸ்களை சுமார் 37 லட்சம் பயனர் டவுன்லோட் செய்துள்ளனர். தீய நோக்கம் கொண்ட இந்த ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரில் எத்தனை நாட்களாக இருந்தன என்ற விபரம் தெரியவில்லை என்று கூகுள் பாதுகாப்பு நிறுவன செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அனைத்து ஜூடி விளையாட்டுகளும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து அப்டேட் செய்யப்பட்டே வழங்கப்பட்டிருக்கின்றன என்று அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது. இந்தத் தெளிவான(?) குழப்பமான (!) அறிக்கை யாரைக் காப்பாற்ற, யார் மீது பழிபோட என்ற தெரியாத நிலைதான் நீடிக்கிறது.இப்படி ஹார்டுவேர்கள் மூலமாகவும், சாப்ட்வேர்கள் மூலமாகவும் தோன்றும் பாதுகாப்புச் சிக்கல்களுக்கு மத்தியில்தான் நம்முடைய அனைத்து உரையாடல்களும், குறுஞ்செய்திகளும், வங்கிப் பரிவர்த்தனைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆண்ட்ராய்ட் 8 பதிப்புகள் வெளியாகிவிட்ட போதிலும் இன்னும் 4ம் பதிப்பையே தாண்டாத ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்களும், ஆப்பிளின் விலை குறைந்த பழைய பதிப்புகளை வாங்கிப் பயன்படுத்தி வருபவர்களும், விண்டோஸ் 10 நிறுவ கூடுதல் செலவாகும் என்பதால் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 7 ஆகிய முந்தைய கணினி இயங்குதளங்களைப் பயன்படுத்தி வரும் பல கோடிப் பேருக்கும் இந்த தொழில்நுட்ப சிக்கல்களால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது சாத்தியமா என்பது எண்ணிப்பார்ப்பதற்கே கடினமான ஒன்றுதான்.

பயனாளருக்கு பிரச்சனை ஏற்படாத வரை அல்லது ரான்சம்வேர் தாக்குதல் போல மறைக்கமுடியாத அளவில் பாதிப்புகள் தோன்றினால் மட்டுமே பாதிப்பின் உண்மைகள் வெளியே தெரியவரும் என்பதுதான் இன்றைய நிதர்சனம்.

Leave a Reply

You must be logged in to post a comment.