திருநெல்வேலி;
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் நிர்வாகம்
வனத்துறைக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும்; தவறினால் வனத்துறை யிடம் எஸ்டேட்டை ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குமரி முதல் குமுளி வரை அகஸ்தியர் மலைப்பகுதிகள் உள்ளன. இதில் ஒரு பகுதியாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தாமிரபரணி ஆறு மற்றும் 14 கிளை நதிகளும் உள்ளன. 20 ஆயிரத்து 263 தாவரவகைகளும் இங்குள்ளன. மாஞ்சோலை பகுதியில் புலிகள் காப்பகத்தில் 8 ஆயிரத்து 374 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் தேயிலை நிறுவனம் (பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி) குத்தகை அடிப்படையில் தேயிலை தோட்டம் அமைத்து நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் 1929 இல் சிங்கம்பட்டி ஜமீனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து 99 வருடத்திற்கு குத்தகை எடுத்து வியாபாரம் நடத்தி வருகிறது. 1948ஆம் ஆண்டு ஜமீன் முறை ஒழிக்கப்பட்டபோது அந்த பகுதியை அரசு கையகப்படுத்தியது. அரசின் மூலம் அந்த நிறுவனத்திற்கு மீண்டும் குத்தகைக்கு வழங்கப்பட்டது.

வெறும் ரூ.1.75
அதன்படி மாஞ்சோலை தேயிலை தோட்டம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1.75பைசா வீதம் 8ஆயிரத்து 374 ஏக்கர் நிலத்துக்கான குத்தகையாக அரசுக்கு செலுத்தி வந்தது. இந்நிலையில் தொகையை தேயிலை கம்பெனி நிர்வாகம் அதிகமாக வழங்க வேண்டும் என வனத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், தேயிலை கம்பெனி நிர்வாகம் நீதிமன்றம் சென்று தடையாணை வாங்கியது. அதோடு, வனத்துறை-தேயிலை தோட்ட நிர்வாகம் சார்பில் சுமார் 4 வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இதில் தமிழக வனத்துறைக்கு ஆதர
வாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதனால் தேயிலை கம்பெனி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த 19.01.2018 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், மாஞ்சோலை எஸ்டேட் பகுதி வனப்பகுதியில் இருப்பதால் மாஞ்சோலை வனப்பகுதியாகவே நீடிக்க வேண்டும். அதோடு இங்கு தனியார் விவசாயம் செய்யக்கூடாது. யாருக்கும் இங்கு பட்டாவும் வழங்க கூடாது என தீர்ப்பளித்தது.

இது தமிழக வனத்துறைக்கு கிடைத்த வெற்றியாகும். மேலும் தனியார் தேயிலைத் தோட்ட கம்பெனி நிர்வாகத்தின் குத்தகை காலம் வரும் 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. அதுவரை தேயிலை கம்பெனி நிர்வாகம் வனத்துறைக்கு வழங்க வேண்டிய பழைய பாக்கி ரூ.300 கோடியை வழங்க வேண்டும்.அதோடு 2028 ஆம் ஆண்டு வரை தேயிலை தோட்டத்தை தொடர்ந்து நடத்த ரூ.700 கோடி கட்ட வேண்டும். ஆக மொத்தம் ரூ.1000 கோடியை கம்பெனி நிர்வாகம் வனத்துறைக்கு கட்ட வேண்டும். இல்லையென்றால் கம்பெனி நிர்வாகம் மாஞ்சோலை எஸ்டேட் இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.எனவே, தேயிலை கம்பெனி நிர்வாகம்

உடனடியாக நீதிமன்றம் கூறிய தொகையை செலுத்தச் சொல்லி நோட்டீஸ் அனுப்ப
உள்ளோம். அவர்கள் கட்ட வில்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வனவிலங்கின் கணக்கெடுப்பு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 15 புலிகளும் 300 யானைகளும் உள்ளன. அதோடு அரிய வகை விலங்குகளும் உள்ளன. 4 ஆண்டுக்கு ஒருமுறை இந்தியாவில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தாண்டு இந்த மாதம் 27 ஆம் தேதி விலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் துவங்க உள்ளன. இந்த பணிகளில் 500 கேமராக்கள் பொருத்தப்பட்டு 250 ஊழியர்கள், 200 பொதுநல ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது துணை இயக்குநர் இளங்கோ, அதிகாரிகள் சங்கரநாராயணன், வெள்ளத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.