திருப்பூர், ஜன. 22 –
தமிழக அரசு பேருந்து கட்டணச் சுமையைத் திணித்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி திருப்பூர் மற்றும் கோவையில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து கட்டணம் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதை கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் திங்களன்று காலை கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் திடீரெனபி.என். சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி முழக்கமிட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வடக்கு காவல் உதவி ஆணையர் அண்ணாதுரை மற்றும் வடக்கு காவல் ஆய்வாளர் பிச்சையா உள்பட காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடிய மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்களை கலைந்து செல்லுமாறு கூறினர். எனினும் மாணவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு மறியலில் ஈடுபட்டோரை சுற்றி காப்பு அரண் அமைத்து நின்று கொண்டனர். மாணவர் பிரதிநிதிகள் வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடலாம் என்று காவல் துறையினர் கூறினர்.

இதையடுத்து மாணவர்கள் தரப்பில் ஏழு பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க காவல் துறையினர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக மாணவர்களின் உணர்வுகளை மாநில அரசுக்குத் தெரிவிப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார். இது குறித்து தனியாகக் கலந்தாலோசித்த மாணவர்கள், அரசு பேருந்து கட்டணத்தைக் குறைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், தற்காலிகமாக மறியல் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் மூன்று மணி நேரம் நீடித்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கோவை சிபிஎம் கல்லூரி:
பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி திங்களன்று கோவைப்புதூர் சிபிஎம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். இதன்பின் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் தினேஷ், செயலாளர் பிரபாகரன் தலைமையில் கல்லூரி முன்பிருந்து பேரணியாக சென்று மதுக்கரை சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று அரசிற்கெதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: